நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு தமிழகம் வந்தது: தலைமைச் செயலாளருடன் ஆலோசனை : சென்னையில் இன்று ஆய்வு

சென்னை: `நிவர்’ புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று தமிழகம் வந்தது. தலைமை செயலகத்தில் தலைமை செயலாளருடன் மத்திய குழு பல மணிநேரம் ஆலோசனை செய்தது. நிவர் புயலால் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தனர். தலைமை செயலாளர், சேதமதிப்பு குறித்த அறிக்கையை அளித்தார். மத்திய குழுவினர், பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் இன்றும், நாளையும் நேரில் சென்று பார்வையிடுகின்றனர். அதன் பிறகு அவர்கள் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிப்பார்கள். அதன் அடிப்படையில் நிவாரண ெதாகையை மத்திய அரசு அறிவிக்கும் என்று தெரிகிறது.  தமிழகத்தை கடந்த 25ம் தேதி `நிவர்’ புயல் தாக்கியது. அப்போது சூறாவளி காற்றும், கனமழையும் பெய்தது. கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் சேதம் அடைந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து, வீடுகள் தண்ணீரில் மூழ்கியது.

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை பார்வையிட மத்திய குழு கடந்த மாதம் 30ம் தேதி சென்னை வருவதாக இருந்தது. ஆனால், புதிதாக புரெவி புயல் வந்ததால் மத்திய குழு வருகை தள்ளி

வைக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஸ் அக்னிதோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று மதியம் 1 மணிக்கு சென்னை வந்தனர். பின்னர் நேற்று மாலை 3.30 மணிக்கு தலைமை செயலகம் சென்று தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தமிழகத்தில் நிவர் புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினரிடம் அறிக்கையாக அளித்தார். மேலும் புயல் சேதங்கள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் மத்திய குழுவினருக்கு காண்பிக்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் ஆய்வு நடத்திய பிறகு மாநில அரசு அளித்த புயல் சேத விவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும். அதன் அடிப்படையில் ஆய்வு முடிந்து டெல்லிக்கு திரும்புவார்கள். இவர்கள் தங்கள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்த பிறகு மத்திய அரசு தமிழகம், புதுச்சேரிக்கான நிவாரண தொகையை அறிவிக்கும்.

இந்நிலையில் தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்த பிறகு மத்திய குழுவினர் இரண்டு பிரிவாக பிரிந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளனர். ஒரு குழுவினர் இன்று காலை 9 மணிக்கு வடசென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறது. பின்னர் இந்த குழு இரவு புதுச்சேரி மாநிலத்துக்கு செல்கிறது. நாளை புதுச்சேரி மாநிலத்திலும், பிற்பகல் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்துவிட்டு இரவு சென்னை திரும்புகிறது. 2வது குழுவினர் இன்று காலை 9 மணிக்கு வடசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், 7ம் தேதி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்வார்கள்.

இன்றும், நாளையும் தமிழகத்தில் 8 மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் ஆய்வு செய்துவிட்டு சென்னை திரும்பும் மத்திய குழுவினர் 8ம் தேதி மதியம் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். பின்னர் அன்று மாலை 5.30 மணிக்கு மத்திய குழு டெல்லி திரும்புகிறது. டெல்லி சென்ற பிறகு, தமிழகத்தில் நடத்திய ஆய்வுகள் குறித்து அறிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்படும். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நிவர் புயல் நிவாரண தொகையை அளிக்கும்.

3,758 கோடி ஒதுக்க தமிழகஅரசு கோரிக்கை

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று, சென்னை எழிலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சேதார மதிப்பீடு குறித்து மத்திய குழுவினரிடம் தமிழக அரசு அளித்துள்ளது. தற்காலிக நிவாரணமாக 650 கோடி தேவை என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடனடி சீரமைப்பிற்கு ₹3,108 கோடியும் மொத்தமாக, ₹3758 கோடியும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடிசை வீடுகள், மண் வீடுகளில் வசிப்பவர்களால் புயல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு தயவு செய்து பாதுகாப்பில்லாத இடங்களில் இருக்கும் மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள நிவாரண முகாமிற்கு செல்ல வேண்டும். அதேபோன்று புயல், மழை குறித்து அவதூறு, வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். அரசின் சார்பில் வெளியிடப்படும் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

குழுவில் இடம்பெற்ற அதிகாரிகள் விவரம்

* அசுதோஸ் அக்னிகோத்ரி (மத்திய உள்துறை இணை செயலாளர், டெல்லி)

* மனோகரன் (மத்திய வேளாண் எண்ணெய் வித்துக்கள் வளர்ச்சி இயக்குனர், ஐதராபாத்)

* ரணன் ஜெய்சிங் (மத்திய சாலை போக்குவரத்து துறை மண்டல அதிகாரி, டெல்லி)

* பால் பாண்டியன் (மத்திய மீன்வள ஆணையர், டெல்லி)

* ஜெ.ஹர்ஷா (மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குனர், சென்னை)

* பர்தென்ட் குமார்சிங் (மத்திய நிதித்துறை இயக்குநர், டெல்லி)

* ஓ.பி.சுமன் (மத்திய மின்சார குழும துணை இயக்குனர், டெல்லி)

* தர்மவீர்ஜா (ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், டெல்லி).

Related Stories: