தொடர்மழை பெய்தும் நத்தை வேகத்தில் நிரம்பும் சாத்தையார்-தண்ணீரை அடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை புகார்

அலங்காநல்லூர் : தொடர்மழை பெய்தும் கூட பாலமேடு அருகே சாத்தையார் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் உள்ளது. தண்ணீரை அடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.பாலமேடு அருகேயுள்ளது சாத்தையார் அணை. 29 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை கடந்த சில ஆண்டுகளாக நிரம்பாமல் உள்ளது. இப்பகுதியில் பருவமழை காலங்களில் மழை பெய்த போதிலும் அணைக்கு நீர்வரத்தின்றி வறண்டு காணப்பட்டது.

மேலும் அணை பகுதிக்கு மேலே உள்ள கண்மாய்கள் கூட நிரம்பி விடுகிறது. ஆனால் சாத்தையார் அணை மட்டும் எத்தனை புயல் மழை காலங்களிலும் நிரம்பாமல் இருப்பது இப்பகுதி விவசாயிகளுக்கு வேதனையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது தொடர் மழை பெய்தும் கூட அணைக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்து வருகிறது. இதற்கு அணைக்கு மேல் பகுதியில் உள்ள காட்டுநாயக்கன் கண்மாயின் மறுகால் வழியாக தண்ணீர் செல்வதே காரணம் என்றும், இதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் சாத்தையார் அணைக்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுப்பணித்துறை பொறியாளர் சுகுமாரன், துணை பொறியாளர் மொக்கமாயன் ஆலோசனையின் பேரில் இரிகேசன் இன்ஜினியர் தியாகராஜன், இளம் பொறியாளர் போஸ் நேற்று பாலமேடு போலீசில் புகார் மனு அளித்தனர்.

*மீண்டும் அத்துமீறல்

தொடர்மழை பெய்தும் கூட சாத்தையார் அணையில் நேற்று வரை 3 அடி வரை மட்டுமே தண்ணீர் நிரம்பியுள்ளது. இதற்கு மிகப்பெரிய பாறைகளை கொண்டு அணைக்கரை கோயில் அருகில் அடைப்பு ஏற்படுத்தி தண்ணீர் காட்டுநாயக்கன்பட்டி கண்மாயக்கு கொண்டு செல்லப்படுவதே காரணமாகும். இந்த கண்மாய் ஏற்கனவே நிரம்பி மறுகால் செல்கிறது.

இந்த மறுகால் வழியாக வீணாகும் தண்ணீர் பாசன வசதி பெறாத இடங்களுக்கு செல்வதை தடுத்து தண்ணீர் சென்ற கால்வாயை கடந்த 29ம் தேதி விவசாயிகள் அகற்றினர். இதையடுத்து மீண்டும் மர்மநபர்கள் சாத்தியார் அணைக்கு வரும் தண்ணீரை அடைத்து அத்துமீறி மாற்று தேவைக்கு தொடர்ந்து கொண்டு செல்லப்படுகிறது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: