ஊட்டியில் 266 நாட்களுக்கு பிறகு படகு இல்லம்,தொட்டபெட்டா நாளைமறுநாள் திறப்பு

ஊட்டி : நீலகிரியில் 266 நாட்களுக்கு பிறகு ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் நாளை மறுநாள் (7ம் தேதி) முதல் திறக்கப்பட உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கொேரானா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த மார்ச் 17ம் தேதி சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. செப்டம்பர் மாதம்  9ம் தேதி அறிவிக்கப்பட்ட தளர்வின் போது தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்டவைகள் மட்டும் திறக்கப்பட்டன. படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா படகு இல்லம், முதுமலை உள்ளிட்டவைகள் திறக்கப்படவில்லை.

சுற்றுலா பயணிகளும் இ-பாஸ் நடைமுறை டூரிசம் பிரிவில் விண்ணப்பித்து ஊட்டிக்கு வர அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மற்ற சுற்றுலா தலங்கள் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி அளிக்கப்பட்ட தளர்வுகளின்படி 266 நாட்களுக்கு பிறகு ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், பைக்காரா  படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சி, பைன் பாராஸ்ட், ஊசிமலை, கொடநாடு  காட்சிமுனை, லேம்ஸ்ராக், அவலாஞ்சி, சூட்டிங்மட்டம், கேர்ன்ஹில் வனப்பகுதி,  டால்பின்நோஸ் காட்சிமுனை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் நாளைமறுநாள் (7ம் தேதி)  திறக்கப்பட உள்ளன.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் நாளைமறுநாள் (திங்கள்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன. முதுமலை புலிகள் காப்பகமாக விளங்குவதால், அதனை திறப்பது குறித்து அரசிடம் தொிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இ-பதிவு முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும், என்றார்.

Related Stories: