செம்மொழி நிறுவனத்தை கலைக்கும் முடிவை கைவிடுமாறு மத்திய பா.ஜ அரசுக்கு உடனடியாக உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:  இந்திய மொழிகள் ஆய்வுக்காக, மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தை, “பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா” என்ற மத்தியப் பல்கலைக்கழகமாகப்  பெயர் சூட்டி, அத்துடன், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைத்திட எடுக்கப்பட்டுள்ள மத்திய பாஜ அரசின் முடிவுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக ஆட்சி  இருக்கும் வரை உயிரூட்டத்துடன் நிதி ஆதாரத்துடன் தமிழ்மொழி வளர்ச்சிக்காகத் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது செம்மொழித் தமிழாய்வு நிறுவனம். ஆனால் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகும்  பாஜ மத்தியில் ஆட்சிக்கு வந்த  பிறகும் இந்த மத்திய ஆய்வு நிறுவனம் அனைத்து வழிகளிலும், திட்டமிட்டு முடக்கப்பட்டது.

ஏற்கனவே இருக்கின்ற செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தைச் செயல்பட விடாமல் முடக்கி ஒரு நிறுவனமாக இருக்கும் மொழியின் அந்தஸ்தை, ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் “துறை” என்ற அளவில் சுருக்கி, சிறுமைப்படுத்தும் இன்னொரு  தந்திர வேடமும் அணிந்து, மத்திய பாஜ அரசு உள்நோக்கத்துடன் நடந்து கொள்வது கடுமையான கண்டனத்திற்குரியது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சென்னையிலேயே தொடர்ந்து செயல்பட்டிட உத்தரவிட்டு, இந்த நிறுவனத்தை,  மைசூரில் உள்ள பிபிவி பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் பிற்போக்குத்தனமான முடிவினைக் கைவிட வேண்டும் என்று மத்திய பாஜ அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  முதல்வர் பழனிசாமி  உடனடியாக தலையிட்டு, மத்திய  அரசின் இந்த முடிவை கைவிட உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். தவறினால், செம்மொழியாம் தமிழுக்கு, திட்டமிட்டுச் செய்த துரோகம் ஆகிவிடும் என்பதை எண்ணிப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்று தெரிவிப்பது எமது  கடமை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>