சிவகங்கையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி இணைப்புக் கடனாக ரூபாய் 838.77 கோடி வழங்கப்பட்டுள்ளது: முதல்வர் பழனிச்சாமி பேச்சு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக, மிகக் குறைவு, இறப்பு சதவிகிதமும் குறைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில், இதுவரை இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 6,345 நபர்கள், குணமடைந்தவர்கள் 6,139  நபர்கள், இறந்தவர்கள் 126 நபர்கள். நேற்றையதினம், 16 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 3.12.2020 அன்று குணமடைந்தவர்கள் 14 நபர்கள், தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 80 நபர்கள். 3.12.2020 வரை நடைபெற்ற மொத்த பரிசோதனைகளில் 1,45,073 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். நாள்தோறும் 958 பரிசோதனைகள் இந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்ட நிர்வாகமும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் சிறப்பாக செயல்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இந்நோய்ப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில், இந்நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவமனைகளும், படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. தேவையான மருந்துகளும், உபகரணங்களும் கையிருப்பில் தயார் நிலையில் உள்ளன. இம்மாவட்டத்தில் நாளொன்றுக்கு 92 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 17,648 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதில், 5,55,369 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். நோய்க் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி ஒன்று உள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதாரத் துறைக்கும் மற்றும் பல்வேறு துறைகளுக்கும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்து வழங்கப்பட்ட அறிவுரைகளை சரியான முறையில் பின்பற்றிய காரணத்தால் இந்நோய்ப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில், முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 8,937 மனுக்களில் 4,111 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2019-20ஆம் நிதியாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 6,486 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பட்டா மாறுதல் வேண்டி பெறப்பட்ட 1,310 மனுக்களில், 784 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் இயங்கி வரும் 7,342 மகளிர் சுய உதவிக் குழுக்களில் 97,329 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த மூன்றாண்டுகளில் இக்குழுக்களுக்கு வங்கி இணைப்புக் கடனாக ரூபாய் 838.77 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டில் ரூபாய் 370 கோடி வங்கி இணைப்புக் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூபாய் 367 கோடி வழங்கப்பட்டு, 62,396 நபர்கள் பயனடைந்துள்ளனர். 2020-21ஆம் ஆண்டில் இக்குழுக்களுக்கு ரூபாய் 370 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 41,542 உறுப்பினர்களுக்கு ரூபாய் 121.16 கோடி வங்கி இணைப்புக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் 5,393 உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் ரூபாய் 13.48 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. இன்றையதினம் 30 எண்ணிக்கையிலான திட்டப் பணிகளுக்கு ரூபாய் 27.46 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அரசுக் கட்டடப் பணிகளுக்கு ரூபாய் 36.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 27 பணிகள் நிறைவடைந்துள்ளன. அரசு நலத்திட்ட உதவிகள் 7,457 நபர்களுக்கு சுமார் ரூபாய் 23.35 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 76 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. காவேரி குடிநீர் கிடைக்கப்பெறாத சிவகங்கை மாவட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தற்போது பல்வேறு நிலைகளில் நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

3 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 3,352 கிராமங்களையும் உள்ளடக்கிய சிவகங்கை மாவட்ட மக்களுக்காக மாபெரும் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறோம். இதில், இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக 799 ஊரக குடியிருப்புகளும், 3 பேரூராட்சிகளும், ஒரு நகராட்சியும், புதுக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 125 குடியிருப்புகளும், மேலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் ஒரு பேருராட்சியும் பயன் பெறுகின்றன. சிவகங்கை மாவட்டத்திற்கு காவேரி குடிநீர் கிடைக்காமல் விடுபட்ட 11 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட 2,452 ஊரகக் குடியிருப்புகளும், 8 பேரூராட்சிகளும், 3 நகராட்சிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொருட்டு சேர்க்கப்பட்டுள்ளன.

காவேரி குடிநீர் கிடைக்கப் பெறாத சிவகங்கை மாவட்ட மக்களுக்கு சிவகங்கை மாபெரும் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தமிழ்நாடு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண்.97-ல் 10.9.2020-ன்படி ரூபாய் 1752.73 கோடி மதிப்பீட்டில் 11.40 லட்சம் மக்கள் தற்போது பயன்பெறும் வகையில் அரசாணை வெளியிட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும்.  இத்திட்டம் நிறைவேறும்போது, சிவகங்கை மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவகங்கை நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நிலையிலுள்ளது. தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. காரைக்குடி நகராட்சியைப் பொறுத்தவரை பாதாள சாக்கடைத் திட்டம் ரூபாய் 112.5 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு சுமார் 80 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன, எஞ்சிய பணிகளை விரைந்து  முடிக்க அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிமராமத்துத் திட்டத்தைப் பொறுத்தவரை, 2016-2017 முதல் 2019-2020 வரை 236 கண்மாய்கள் தூர்வாரப்பட்டதில் 35,566 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2020-2021ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில்

35 கண்மாய்கள் புனரமைக்கும் பணி எடுத்துக் கொள்ளப்பட்டு, 16,230 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுமளவில் ரூபாய் 26.54 கோடி மதிப்பீட்டிலான பணிகளில் 80 சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன, எஞ்சிய பணிகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உப்பாறு உபவடி நிலத்திலுள்ள 61 கண்மாய்கள் மற்றும் வரத்து வாய்க்கால்களை புனரமைக்கும் பணி ரூபாய் 37.84 கோடி செலவில் எடுத்துக் கொள்ளப்பட்டு, 22,059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட உப்பாற்றை சமப்படுத்துதல் மற்றும் அதன் குறுக்குக் கட்டுமானங்கள் புனரமைக்கும் பணி ரூபாய் 14.50 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு 7,454 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 100-லிருந்து 150-ஆக உயர்த்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3 உயர்மட்டப் பாலங்கள் திருப்பத்தூர், ஆலங்குடி சாலை, மாத்தூர் முளக்குளம் சாலை, அரண்மனை சிறுவயல் சாலையில் ரூபாய் 20.16 கோடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2020-2021 நிதியாண்டில் கொட்டாம்பட்டி-திருப்பத்தூர்- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை எண் 383 நீட்சியில் சிங்கம்புணரி முதல் திருப்பத்தூர் வரை 24.450 கி.மீ நீளத்திற்கு ரூபாய் 113.76 கோடி மதிப்பீட்டில் இச்சாலையானது கடினபுருவங்களுடன் கூடிய இருவழிச் சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடச் சாலைத் திட்டத்தின் கீழ் மேலூர்-திருப்பத்தூர் சாலையில் 16.26 கி.மீ சாலையை அகலப்படுத்தி மேம்படுத்துதல் மற்றும் 2.66 கி.மீ. நீளம் திருப்பத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு ரூபாய் 110 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணிகள் துவங்கப்படும்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2020-2021 ஆம் ஆண்டில் 35 ஊராட்சிகளிலுள்ள 53 குக்கிராமங்களில் 4,231 வீடுகளுக்கு ரூபாய் 885.82 கோடி மதிப்பீட்டில் வீடுகளுக்கான செயல்படக்கூடிய குடிநீர் இணைப்பு வழங்கிடும் பணிகளில் தற்போது வரை 749 குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன, எஞ்சிய இணைப்புகள் விரைவில் கொடுக்கப்படும்.

திடக்கழிவு மேலாண்மைப் பணிகள்-2018-2019-ன்கீழ் ரூபாய் 19.87 கோடி மதிப்பீட்டில் 29 பணிகளில், 28 பணிகள் முடிவுற்று சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை நகராட்சிகளில் பயன்பாட்டில் உள்ளது.

2016-2017, 2018-2019 மற்றும் 2019-2020 ஆண்டுகளில் வறட்சி மற்றும் மழையால் ஏற்பட்ட பயிர்ச் சேத இழப்பீடாக 96,109 விவசாயிகளுக்கு ரூபாய் 82.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. கூட்டு பண்ணையத் திட்டத்தில் நிறைய உதவிகள் செய்யப்படுகிறது.

திருப்பத்தூர், நாட்டரசன்கோட்டை ஆகிய பேரூராட்சிகளில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டிக் கொடுத்திருக்கிறோம். திருப்பத்தூர் தேர்வு நிலை பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ரூபாய் 3.30 கோடி மதிப்பீட்டில்  கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  2020-21-ஆம் ஆண்டில் சிங்கம்புணரி, மானாமதுரை மற்றும்  திருப்பத்தூர் ஆகிய பேரூராட்சிகளில் ரூபாய் 7.50 கோடி மதிப்பீட்டில்  வாரச்சந்தை  மேம்பாட்டுப்  பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கீழடியில் நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கும் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கும், தமிழ்நாடு அரசு ரூபாய் 1.02 கோடி ஒதுக்கீடு செய்தது. மேலும், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், அகரம் மற்றும் கொந்தகை ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளவுள்ள ஆறாம் கட்ட தொல்லியல் அகழாய்வுப் பணிகள் என்னால் 19.2.2020 அன்று காணொலிக் காட்சி  மூலமாக துவக்கி வைக்கப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சி மூலம் தமிழரின் 2,000 ஆண்டுகள் பழமையான, தொன்மையான நாகரிகத்தை பண்பாட்டை உலகரியச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>