பைகார நீர்வீழ்ச்சி திறக்கப்படாததால் வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கூடலூர் :நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சுற்றுலாத் தலங்கள் தற்போது செயல்படத் துவங்கி உள்ளன.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட இந்த சுற்றுலாத்தலங்கள் தற்போது ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த பல மாதங்களாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த பொதுமக்கள் தற்போது சுற்றுலா செல்ல அனுமதி கிடைத்துள்ளதால் இ.பதிவு அனுமதி பெற்று நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவில் இருந்தும் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற ஒரு சில சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல முடிகிறது.

மாவட்டத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல சுற்றுலாத் தலங்கள் இன்னமும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படாத நிலையே உள்ளது.

குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட  பகுதியில் நடத்தப்பட்டு வந்த சூழல் சுற்றுலா திட்டம், ஊசிமலை காட்சி முனை, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி மற்றும் ஒன்பதாவது மைல் ஷூட்டிங் மட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்னமும் சுற்றுலாப் பயணிகளுக்காக அனுமதிக்க்கப்படாத நிலை உள்ளது.

இதன் காரணமாக இந்த சுற்றுலா திட்டங்களை நம்பி உள்ள உள்ளூர் தொழிலாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா வாகன ஓட்டிகளும் வருமான இழப்பை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதமாக தங்கள் தொழிலில் போதிய வருவாய் இன்றி தவித்து வரும் இவர்கள், தங்களது வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் சுற்றுலா தொழில் வளர்ச்சி பெறவும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் முழுமையாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: