அம்மையார்குப்பம் ஏரி நிரம்பியது பூஜை செய்து மக்கள் வழிபாடு

பள்ளிப்பட்டு: அம்மையார்குப்பம் ஏரி நிரம்பியதால் சிறப்பு பூஜைகள் செய்து கிடா விருந்து வைத்து வழிபட்டனர். தங்களது ஐந்தாண்டு ஏக்கம் நிறைவேறியுள்ளது என்று மக்கள் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் ஊராட்சியில் 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டனர். மழை பெய்து  தங்களது பிரச்னை தீருமா என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில், சில நாட்களாக பெய்த கனமழையால் அம்மையார்குப்பம் ஏரி நிரம்பியது. முழு கொள்ளளவை தாண்டியதால் கடவாசல் வழியாக உபரி நீர் வெளியேறியது. இதை பார்த்ததும் அம்மையார்குப்பம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  கிராம பெண்கள் உள்பட மக்கள் திரண்டு வந்து தண்ணீர் செல்லும் பாதையில் பூ தூவி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். ஊராட்சி மன்ற தலைவர்  ஆனந்தி செங்குட்டுவன், துணைத் தலைவர் ஜெயந்தி சண்முகம் ஆகியோர்  சார்பில் ஏரியில் சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு கிடா வெட்டி விருந்து கொடுத்தனர்.

Related Stories: