சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் 5 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது: புரெவி புயல் நேரத்தில் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் 5 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். புரெவி புயல் தென் தமிழக கடலோர பகுதியை நெருங்கி வருகிறது இந்த நிலையில் பாம்பனில்பலத்த காற்று வீசி வருகிறது. இந்த புயலானது கன்னியாகுமரி - பாம்பன் இடையே இன்று நள்ளிரவில் இருந்து நாளை அதிகாலை வரை கரையை கடக்க உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் மீனவர்கள் தங்கள் படகுகளை கடற்கரையில் இருந்து சுமார் 50 முதல் 60 மீட்டர் தொலைவில் நிறுத்தி வைத்துள்ளனர்.

நேற்று இரவு முதல் இந்த பகுதியில் கடலானது சற்று அமைதியாக இருந்து வருகிறது. அதாவது வழக்கத்துக்கு மாறாக குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் இந்த கடலானது 5 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியுள்ளதால் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும் பொதுமக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர். புரெவி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதி மிகவும் அமைதியான சூழலே நிலவி கொண்டிருக்கிறது.

ஆனால் பொதுமக்கள் இந்த அமைதி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அச்சத்தில் உள்ளனர். புயல் தொடர்பாக அறிவித்து 3 நாட்கள் ஆகியும் இதுவரை மீன்வளத்துறை சார்பாக எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: