கொரோனா ஊரடங்கு தளர்த்திய பின் வெளிமாநிலங்களுக்கு வால்வோ பஸ் சேவை அதிகரிப்பு: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

பெலகாவி: மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு தளர்த்திய பின், வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் வால்வோ பஸ்களின் சேவை அதிகரித்துள்ளதாக துணைமுதல்வரும் போக்குவரத்துத்துறை அமைச்சருமான லட்சுமண் சவதி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, பெங்களூரு உள்பட மாநிலத்தில் உள்ள மாநகரங்கள், பெரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அரசு பஸ்களில் மக்கள் பயணம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம். இதற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சொந்தமாக வாகனங்கள் வைத்திருப்போரில் 20 சதவீதத்தினர் தங்களது வாகனங்களை தவிர்த்து அரசு பஸ்களில் பயணம் செய்கிறார்கள்.

 மாநிலம் முழுவதும் தாலுகா தலைநகரங்களில் பஸ்நிலையம் மற்றும் பணிமனைகளை உருவாக்கி வருகிறோம். பயணிகள் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட வருவாய் இழப்பு, இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மாநிலம் முழுவதும் பஸ் சேவை தொடங்கப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட சில வழி தடங்களில் மட்டும் பயணிகள் அதிகம் செல்வதால் வருவாய் கிடைக்கிறது. பெங்களூருவிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு வால்வோ பஸ்களின் இயக்கத்தை அதிகரித்து வருகிறோம். இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மற்ற மாநிலங்களைவிட கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு தளர்த்திய பின் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் வால்வோ பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: