பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது: காயமடைந்த 20 பேரை நள்ளிரவில் காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டு

பெரம்பலூர்: திருவண்ணாமலை மாவட்டம் திருமழிசை பகுதியை சேர்ந்த மணி என்பவர் தலைமையில் 20 பேர் ராமேஸ்வரம் நோக்கி வேனில் கடந்த 30ம் தேதி இரவு புறப்பட்டு சென்றனர். இவர்களது வேன் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே அதிகாலை 2 மணியளவில் வந்தது. அப்போது டிரைவரின் கவனக்குறைவால் நிலை தடுமாறி சென்ற வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 20 பேரும் படுகாயமடைந்தனர்.

அப்போது அங்கு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் புண்ணியமூர்த்தி, ஏட்டு ரவி மற்றும் போலீஸ் ஆனந்த் ஜெயராஜ் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

இரவு 2 மணி என்றும் பாராமல் விபத்தில் சிக்கியவர்களை ஒரு மணி நேரம் போராடி தூக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றி அனைவரது உயிரையும் காப்பாற்றியதற்காக பெரம்பலூர் எஸ்பி நிஷா பார்த்திபன் பாராட்டினார். விபத்து தொடர்பாக மங்களமேடு டிஎஸ்பி மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: