கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது

மைசூரு: கால்நடைகள் மீது தாக்குதல் நடத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். மைசூரு மாவட்டம் ஹூனசூரு தாலுகா சிக்காடனஹள்ளி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை புகுந்து கால்நடைகள், வளர்ப்பு நாய்கள் மீது  தாக்குதல் நடத்தி கொன்று வந்தது. இதில் அச்சம் ஏற்பட்ட கிராமத்தினர் மாலை நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்து வந்தனர்.  அதேபோல், சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். கிராமத்தினரின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள்  சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.  பின்னர், விவசாயி சந்திரசேகர் என்பவரது தோட்டத்தில் இரும்பு கூண்டு அமைத்து அதில் இறைச்சியை  கட்டிவைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், சம்பவத்தன்று மாலை கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தை கூண்டில்  இருந்த இறைச்சியை சாப்பிட சென்ற போது சிக்கிக்கொண்டது.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் கால்நடை மருத்துவர் மூலம் சிறுத்தைக்கு  மயக்க ஊசி செலுத்தி நாகரஹொலே வனப்பகுதிக்கு எடுத்து சென்று விட்டனர்.  இப்பகுதியில் மேலும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் அவைகளை பிடிக்க கூண்டு அமைக்க வேண்டும் என்று கிராமத்தினர் கோரிக்கை  விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Related Stories: