வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெறுகிறது : வானிலை ஆய்வு மையம்

சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெறுகிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். புரெவி புயல் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது. நாளை காலை வலுவடைந்து புயலாக மாறும். இதனால் தென் தமிழக, தென் கேரள கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் மணிக்கு 11 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது.கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே 900 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.

மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம். புயல் இலங்கையை கடந்து மன்னார் வளைகுடா வழியாக குமரிக்கடல் பகுதிக்கு நகரும்.இலங்கையில் கரையை கடந்தாலும் குமரிக்கடல் பகுதி வரை புயல் நீடிக்கும். இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இடி மின்னலுடன் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் இடி மின்னலுடன் அதீத கனமழை பெய்யும். புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டிச.3ம் தேதி குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும், என்றார்.

Related Stories: