பட்டா தராமல் இழுத்தடிப்பு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம்

திண்டுக்கல்: வீட்டுமனை பட்டா கேட்டு திண்டுக்கல்லில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ளது கக்கன் நகர். இங்குள்ள நிலங்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் - கரூர் அகல ரயில் பாதைக்காக கையகப்படுத்தப்பட்டன. இதற்கு மாற்றாக இங்கு வசித்த 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி 34வது வார்டில் உள்ள பர்மா காலனியில் மாவட்ட நிர்வாகம் இடம் ஒதுக்கியது. அந்த இடத்தில் 35 வருடங்களாக பொதுமக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். ஆனால் அந்த இடத்திற்கு மாவட்ட நிர்வாகம் இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், உடனே வீட்டுமனை பட்டா வழங்கக் கோரியும் நேற்று வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பர்மா காலனி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக வீட்டுமனை பட்டா கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் இறங்குவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: