சென்னையில் மழை, நிவர் புயலால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி, பள்ளிகரணை உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு

சென்னை: சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் மழைநீர் தேங்கிய இடங்களில் முதல்வர் பழனிசாமி இன்று மதியம் ஆய்வு செய்கிறார். மழை நீர் வடியாத செம்மஞ்சேரி, பள்ளிகரணை உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்கிறார். செம்மஞ்சேரியில் சில பகுதிகளில் மழை நீர் வடிய வில்லை என செய்தி வெளியான நிலையில் இதன் எதிரொலியாக முதல்வரின் ஆய்வு நடக்கிறது. நிவர் புயல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்தது. இதையடுத்து புயல் கரையை கடந்த உடன் தமிழகத்தில் மழை படிப்படியாக குறைந்தது. பல இடங்களில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இதன்பின் வெள்ள நீர் வடிய தொடங்கியதால் மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

ஆனால் புயல் கடந்து கிட்டத்தட்ட 5 நாட்களாகியும் சென்னை அடுத்த செம்மஞ்சேரி குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீர் வடியாமல் இருப்பது அப்பகுதி வாசிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 6500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை சுற்றி மழைநீர் குளம்போல தேங்கி உள்ளது. இதை காண எந்த அதிகாரிகளும் வரவில்லை,குடிநீர் இல்லை, மின்சாரமும் வழங்கப்படவில்லை என அப்பகுதி வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். முழங்கால் அளவு தேங்கியிருக்கும் இந்த வெள்ள நீரிலேயே அவர்கள் தற்போது வாழ பழகி உள்ளனர். இந்த சூழலில்தான் தற்போது முதல்வர் அங்கு ஆய்வு செய்ய இருக்கிறார்.

Related Stories: