கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கோயில் இடத்தில் கட்டிடம் கட்ட நீண்டகால குத்தகைக்கு அனுமதி: வாடகை ரூ.1.30 லட்சம் நிர்ணயித்து புதிய அரசாணை வெளியீடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. அதனையடுத்து கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள வளாகத்தில் தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நிரந்தர மாவட்ட பெருந்திட்ட வளாகம் அமைப்பதற்கு சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 14.9 ஹெக்டேர் நிலத்தை வருவாய்த்துறையினருக்கு ரூ.1.98 கோடி மதிப்பில் விற்பனை செய்ய இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் கோயில் நிலத்தை கிரையம் செய்வதற்கு முன்னரே கட்டிடம் கட்டுவதற்கு கடந்த மாதம் 23ம் தேதி காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்ட  கடந்த 27ம் தேதி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில் தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.

அதாவது வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அமைத்திட வருவாய் துறைக்கு விற்பனை செய்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்து, அந்த இடத்தை வருவாய்த்துறைக்கு நீண்டகால குத்தகைக்கு அனுமதி அளித்து மாதவாடகை ரூ.1.30 லட்சம் என நிர்ணயம் செய்து 10 நிபந்தனைகளுடன் புதிய அரசாணை வெளியிடுப்பட்டுள்ளது. அர்த்தநாரீஸ்வரர் கோயில் பெயர் உரிமையாளர் என்ற நிலையில் நிரந்தரமாக இடம் பெற்றிருக்க வேண்டும். மாத வாடகை ₹1.30 லட்சம் என்ற அடிப்படையில் மூன்றாண்டு கால வாடகை தொகை ரூ.46.80 லட்சத்தை ஒரே தவணையாக செலுத்தப்பட வேண்டும்.  மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நியாய வாடகை மறு நிர்ணயம் செய்யப்படும் என்பது உள்ளிட்ட 10 நிபந்தனைகளுடன் புதிய அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் வீரசோழபுரம் கோயில் நிலத்தை நீண்டகால குத்தகைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்குமா என்பது வரும் 9ம் தேதி நடைபெற உள்ள நீதிமன்ற விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்கின்றனர் அரசு அதிகாரிகள்.

Related Stories:

>