கலசபாக்கம் தொகுதியில் முகாமில் தங்கியுள்ள 510 குடும்பங்களுக்கு நிவாரணம்

கலசபாக்கம்: நிவர் புயல் மழை காரணமாக, கலசபாக்கம் தொகுதியில் 36 சிறப்பு முகாம்களில் 510 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், வேட்டி- சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முகாம்களில் தங்கியுள்ள 510 குடும்பங்களுக்கு எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் நிவாரண பொருட்களை வழங்கினார். இதையொட்டி, கலசபாக்கம் அடுத்த சீட்டம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் ராஜராஜேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டபிரபு முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுளா சுதாகர் வரவேற்றார். இதில் போளூர் வீட்டுவசதி கடன் சங்க துணைத்தலைவர் பொய்யாமொழி, வக்கீல் செம்பியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் அன்பழகன் நன்றி கூறினார். முன்னதாக, கேசவபுரம் கிராமம் வழியாக எம்எல்ஏ சென்று கொண்டிருந்தபோது, மழையால் சாய்ந்த மின்கம்பத்தை தூக்கி நிறுத்த மின்வாரிய ஊழியர்கள் போராடி கொண்டிருந்தனர். இதை கவனித்த எம்எல்ஏ, மின்வாரிய ஊழியர்களுக்கு உதவியாக மின்கம்பத்தை தூக்கி நிறுத்தினார்.

Related Stories: