கார்த்திகை தீப திருவிழா: பழநியில் கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்

பழநி: பழநி கோயிலில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பழநி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான திருக்கார்த்திகை திருவிழா 24ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு மலைக்கோயிலில் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விளாபூஜை நடந்தது. விழா நிகழ்வுகள் அனைத்தும் ஆகம விதிப்படி நடந்தது.

அதிகாலை 4 மணி முதல் 12 மணி வரை 1 மணி நேரத்திற்கு 1000 பக்தர்கள் வீதம் இணையத்தில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 12 மணிக்கு பின்பு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

பழநி நகரில் இன்று காலை முதலே பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். கோயில் வெளி பிரகாரங்களில் பக்தர்கள் விளக்கேற்றி வழிப்பட்டனர். பக்தர்களின் வாகனங்கள் அடிவார பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நாளுக்கு பிறகு பழநி கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்ததால் வியாபாரம் சூடுபிடித்தது.

மீனாட்சியம்மன் கோயிலில் ‘லட்ச தீபம்’

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கார்த்திகை பெருவிழா நவ. 24ம் தேதி துவங்கியது. டிச. 3ம் தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது. இந்த 10 நாட்களும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் காலை, மாலை இரு வேளைகளில் ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார். கார்த்திகை பெருவிழாவான இன்று மாலை 4 மணிக்கு அம்மன், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜை நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு மீனாட்சி கோயிலில் பொற்றாமரைக்குளம், அம்மன் சுவாமி சன்னதிகள், கொடிமரங்கள் பகுதி, கோசாலை, ஆடிவீதிகள், கோயில் உட்பிரகாரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் லட்ச தீபங்கள் ஏற்றி சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.

இரவு 7மணியளவில் மீனாட்சி சுநத்ரேஸ்வர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி கீழமாசி வீதி அம்மன் தேரடி, சுவாமி சன்னதி தேரடி ஆகிய இடங்களில் எழுந்தருளிகின்றனர். இங்கு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை மீனாட்சி கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்துள்ளனர்.

Related Stories: