8 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்காக இயங்கிய ஊட்டி மலை ரயில்

குன்னூர்: நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் மலை ரயில் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது.இதனால் கடந்த, 8 மாதங்களாக சுற்றுலா பயணிகள் இன்றி நீலகிரி மலை ரயில் இயக்கப்படாமல் இருந்தது. இதனால் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையிலான ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த நிலையில் ‘அவுட் ஆப் லவ் சீசன் 2ம் பாகம்’ என்கிற இந்தி வெப் தொடருக்கான படப்பிடிப்பு நேற்று கேத்தி ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

ஒரு நாள் படப்பிடிப்புக்கு மலை ரயிலை பயன்படுத்த முன் வைப்பு தொகையுடன் 5 லட்சம் ரூபாய்  தெற்கு ரயில்வே நிர்வாகத்தில் செலுத்தப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து 8 மாதங்களுக்கு பிறகு மலை ரயிலை இயக்கி, அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பல மாதங்களுக்கு பிறகு, படப்பிடிப்பு நடந்துள்ளதால் சினிமா சூட்டிங்கை நம்பியுள்ள 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: