நிவர் புயலால் பெரிய பலன் இல்லை தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை: சென்னையில் 35% அதிகம் பொழிவு; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நிவர் புயல் மிரட்டியும் 28 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழையே பதிவாகியுள்ளது. தமிழகத்தை மிரட்டிய நிவர் புயல் காரணமாக சென்னை, புதுச்சேரி, கடலூர், செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய இடங்களில்தான் மழை அதிகமாக பெய்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின்தடை ஏற்பட்டது. இதனால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. செம்பரம்பாக்கம், பூண்டி, மதுராந்தகம் ஆகிய குறிப்பிட்ட ஏரிகள் மட்டும் நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்பட்டது. மேலும் பாலாறு, அடையாறு, கொசஸ்தலையாறு உள்பட சில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழையே பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 35 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது. இது சென்னை வானிலை ஆய்வு மையம் தனது இணையதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

* மீண்டும் புயல்

வங்கக் கடலில் இருந்த நிவர் புயல் கரையை கடந்ததால், இந்த ஆண்டுக்கான அடுத்த புயல் தற்போது உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது தெற்கு அந்தமான் பகுதியில் இன்று உருவாகும் காற்றழுத்தம் வலுப்பெற்று வட மேற்கு திசையில் மெல்ல மெல்ல நகர்ந்து வந்து டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர் பகுதியில் கரையைக் கடக்க உள்ளது. அப்போது தமிழகத்தில் மழை பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Related Stories: