வருசநாடு அருகே கண்மாயில் செத்து மிதந்த மீன் குஞ்சுகள்: விஷம் கலப்பா? போலீசார் விசாரணை

வருசநாடு: வருசநாடு அருகே, கெங்கன்குளம் கண்மாயில், ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகள் செத்து மிதந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வருசநாடு அருகே சுமார் 25 ஏக்கரில் கெங்கன்குளம் கண்மாய் உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இக்கண்மாயில் ஆண்டுதோறும் விவசாயிகள் மீன் குஞ்சுகள் வளர்ப்பர். இந்தாண்டு கட்லா, ரோகு, மிருகால், சிசி, ஜிலேபி உள்ளிட்ட 60 ஆயிரம் மீன் குஞ்சுகளை வளர்க்கும் பணியில் விவசாயி முருகன் என்பவர் ஈடுபட்டுள்ளார். கடந்த சில தினங்களாக கடமலை மயிலை ஒன்றியத்தில் கனமழை பெய்தது. இதனால், சின்னச்சுருளி ஆற்றில் இருந்து நீரை கண்மாய்களில் அதிகளவில் தேக்கி மீன் வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கெங்கன்குளம் கண்மாயில் மீன் குஞ்சுகள் செத்து மிதந்தன. இது குறித்து விவசாயி முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். கடமலைக்குண்டு போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து, செத்து மிதந்த மீன் குஞ்சுகளை பார்வையிட்டனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் என கூறப்படுகிறது. கண்மாயில் விஷம் கலக்கப்பட்டதா? மின் உணவுப்பண்டங்களில் கலப்படமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து விவசாயி முருகன் கூறுகையில், ‘இறந்த மீன்குஞ்சுகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். முடிவு வந்தபின்பு மீன் குஞ்சுகள் எவ்வாறு இருந்தன என தெரியவரும். பாதிப்படைந்த எனக்கு தேனி மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும்,’என்றார்.

Related Stories: