திருமங்கலம் அருகே வழக்கில் இருந்து விடுவிக்க 30,000 லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது: சிறையில் அடைப்பு

திருமங்கலம்: வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற செக்காணூரணி பெண் இன்ஸ்பெக்டர் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த பொன்னமங்கலத்தை சேர்ந்தவர் முத்து. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இருவருக்கும் கடந்த 2017ல் ஏற்பட்ட தகராறில் முத்து அவரது மனைவி காயமடைந்தனர். முத்து கொடுத்த புகாரில் செக்காணூரணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நல்லதம்பி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மகன் மாரி, பேரன் கமல் ஆகியோருக்கு வழக்கில் தொடர்பில்லை எனக்கூறி, இவர்களது பெயர்களை குற்றப்பத்திரிகையில் நீக்கவேண்டும் என நல்லதம்பி, செக்காணூரணி இன்ஸ்பெக்டர் அனிதாவிடம் கேட்டுள்ளார். அதற்கு இன்ஸ்பெக்டர் அனிதா ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.

தவணைமுறையில் தருவதாக கூறிய நல்லதம்பி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தரவே, அவர்கள் நேற்று முன்தினம் ரூ.30 ஆயிரத்தை முதல்கட்டமாக தரும்படி கூறி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அதைப் பெற்ற இன்ஸ்பெக்டர் அனிதாவை, மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

 இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை செக்காணூரணி காவல்நிலையத்தில் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அதன்பின் இன்ஸ்பெக்டர் அனிதா கைது செய்யப்பட்டு மதுரை மாவட்ட சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி வடிவேலு அவரை டிசம்பர் 11ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பெண் இன்ஸ்பெக்டர் அனிதா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு முன், ஒரு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு சென்ற இடத்தில், அங்கிருந்து பணத்தை எடுத்து வந்ததாக எழுந்த புகாரில் திருமங்கலம் பெண் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரியை, டிஐஜி ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தற்போது இதே பகுதியில் மற்றொரு பெண் இன்ஸ்பெக்டர் லஞ்சம் பெற்று கைதானது போலீஸ் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: