வெளியே செல்ல அனுமதிக்கவில்லை எனக்கும், மகளுக்கும் மீண்டும் வீட்டுக்காவல்: மெகபூபா முப்தி பரபரப்பு குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்: தன்னையும், தனது மகளையும் மீண்டும் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றம்சாட்டி உள்ளார்.காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு  கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பரூக், உமர் விடுதலை செய்யப்பட்ட பிறகு, சில மாதங்கள் கழித்தே கடந்த அக்டோபர் 14ம் தேதி மெகபூபா விடுதலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் கட்சிகள் அனைத்தும், ‘குப்கர் பிரகடனம்’ என்ற பெயரில் கட்சி பாகுபாடின்றி ஒன்று சேர்ந்தன. எதிரெதிர் அணியில் இருந்த பரூக், உமருடன் மெகபூபா கைகோர்த்தார். இவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான கருத்துகளை வெளியிட்டனர். இந்நிலையில், தானும், தனது மகள் இல்டிஜாவும் கடந்த 2 நாட்களாக சட்ட விரோதமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக மெகபூபா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கடந்த 2 நாட்களாக நானும், எனது மகளும் மீண்டும் சட்ட விரோதமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு  உள்ளோம். தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு புல்வாமாவில் உள்ள வாகீத் பிர்ராவை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை.  பத்திரிக்கையாளர்கள் எனது வீட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்களை அச்சுறுத்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் இதை செய்கிறது,’ என கூறியுள்ளார்.

Related Stories: