கேரளாவுக்கு லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஸ்ரீவைகுண்டம்:  தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட கொங்கராயகுறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தார்ப்பாய் போட்டு மூடிய நிலையில் லாரி ஒன்று சென்று வந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் இரவும் இதே போல் அப்பகுதி வழியாக வந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். மக்களை கண்டதும் லாரி டிரைவரும், லாரியில் இருந்த சிலரும் தப்பியோடினர். இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் லாரியில் ஏறி சோதனையிட்டபோது அதில் சுமார் 50 கிலோ அளவில் 300க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூடைகளும் மேல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கோதுமை உமி மூடைகளும் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கொங்கராயகுறிச்சி, கருங்குளம், ராமானுஜம்புதூர், நாங்குநேரி வழியாக நாகர்கோவில் 4 வழிச்சாலையை அடைந்து திருவனந்தபுரத்திற்கு கோதுமை உமி மூடைகள் கொண்டு செல்லப்படுவதாக கணக்கு காட்டி ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. லாரியையும், அதிலிருந்த ரசீதுகள், 15 டன் அரிசியையும் வருவாய் துறையினர் கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மணல் கடத்தலா?

தாமிரபரணி ஆற்றின் கொங்கராயகுறிச்சி பகுதியில் சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு உள்ள ஆற்றுமணலை கடந்த காலங்களில் பைக் முதல் கனரக வாகனங்களில் மணல் கொள்ளையர்கள் அதிக அளவில் அள்ளிச் சென்றனர். இதை அப்பகுதி மக்கள் தடுத்து மணலை காப்பாற்ற தொடர்ந்து போராடி வருகின்றனர். 2015ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணிகள் என்ற பெயரில் கொங்கராயகுறிச்சி பகுதியில் உள்ள மணலை கொள்ளையடிக்கவே முயற்சிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையும் அப்பகுதி மக்கள் சாதி மத வேறுபாடின்றி தொடர்ந்து போராடி தடுத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கொங்கராயகுறிச்சி வழியாக கனரக லாரி சென்று வருவதை கண்ட அப்பகுதி மக்கள் மீண்டும் மணல் கொள்ளை நடைபெறுவதாக நினைத்தே அந்த லாரியை மடக்கி பிடித்துள்ளனர். பின்னர்தான் லாரியில் கடத்திவந்தது ரேஷன் அரிசி என தெரியவந்தது.

நிரந்தரத் தீர்வு

நெல்லை திருச்செந்தூர் சாலையில் வைகுண்டம், புளியங்குளம், கருங்குளம், செய்துங்கநல்லூர், கிருஷ்ணாபுரம், வி.எம்.சத்திரம் என அடுத்தடுத்து சோதனை சாவடிகள் பல உள்ளன. இதனால் ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல கொங்கராயகுறிச்சி வழித்தடத்தை கடத்தலில் ஈடுபட்டவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் லாரி வந்து சென்றது என அப்பகுதி மக்கள் கூறுவதால், ரேஷன் அரிசி கடத்தல் எவ்வளவு நாட்களாக நடைபெறுகிறது, யார் யார் அதில் சம்பந்தப்பட்டு உள்ளார்கள் என்பதை போலீசார் விசாரித்து கடும் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்பாகும்.

Related Stories: