புயல் பாதிப்புகள் உன்னிப்பாக கண்காணிப்பு: தமிழகம், புதுவைக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும்: அமித்ஷா டுவிட்.!!!

டெல்லி: நிவர் புயல் பாதிப்புகள் தொடர்பாக உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக உலுப்பெற்றது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்கிடையே, நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. நிவர் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையில் பல குடியிருப்புகள் மழைநீரில் மூழ்கின. சென்னையின் தாழ்வான பகுதிகளில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 100 கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனைபோல், புதுச்சேரியில், நிவர் புயலை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வீடுகள் மற்றும் கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 28ம் தேதி வரை விடுமுறை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இரு மாநிலத்திலும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்கழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  

இந்நிலையில், நிவர் புயல் மீட்புப்பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், நிவார் புயலையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். தமிழக முதல்வர் ஸ்ரீ எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் ஸ்ரீ வி.நாராயணசாமி உடன் பேசியுள்ளேன். சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உறுதியாக செய்து தரும். தேவைப்படும் மக்களுக்கு உதவ ஏற்கனவே என்.டி.ஆர்.எஃப் குழுவினர் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: