மேற்குவங்க பழங்குடியினர் வீட்டில் அமித் ஷா சாப்பிட்டது 5 ஸ்டார் ஓட்டல் உணவு: முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு

கொல்கத்தா: மேற்குவங்க பழங்குடியினர் வீட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாப்பிட்டது 5 ஸ்டார் ஓட்டல் உணவு என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்குவங்கத்தில் அடுத்தாண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் மம்தா தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை வீழ்த்துவதற்கான வியூகங்களை வகுக்க கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொல்கத்தா சென்றார். அங்கு அவர் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார். நிகழ்வின் ஒரு பகுதியாக பாங்குரா பழங்குடியின கிராமத்திற்கு சென்று, அங்குள்ள குடும்பத்தினருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

இது, மேற்குவங்க அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், பாங்குராவுக்கு நேற்று முதல்வர் மம்தா பானர்ஜி வந்தார். அப்போது அவர் பேசுகையில், ‘பழங்குடியினர் வீட்டில் அமித் ஷா அண்மையில் சாப்பிட்ட உணவு, புகைப்பட காட்சிக்காக மட்டுமே. அவர் சாப்பிட்ட உணவு ஒரு 5 ஸ்டார் ஓட்டலில் இருந்து கொண்டு வரப்பட்டது. பாஸ்மதி அரிசி உணவை சாப்பிட்டார். அதற்காக உயர் வகுப்பை சேர்ந்த சமையலர் ஒருவரும் வரைவழைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டது. இது மட்டுமல்லாமல், அந்த குடும்பத்தினர் தயாரித்த உணவு வகைகளை பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பழங்குடியினர் வீட்டில் அமித் ஷா சாப்பிட்டது பெரிதாக பேசப்படுகிறது.

பாஜகவின் பொய்களை மக்கள் புரிந்துகொள்ளத்  தொடங்கியுள்ளனர். அமித் ஷா பழங்குடியினர் வீட்டிற்கு வருவதற்கு முன்பாக அந்த வீடு  முழுவதும் சுத்திகரிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. ஆனால், நான் இன்று மக்களை எளிதாக சென்று சந்திக்கிறேன். அவர்களுடன் கட்டிலில் அமர்ந்து அவர்களின் குறைகளை கேட்டறிகிறேன். எனது  சுற்றுப்பயணம் முன்பே திட்டமிடப்படவில்லை. அதேசமயம் உள்துறை அமைச்சர் அமித்  ஷாவின் வருகை விளம்பரத்திற்காக செய்யப்பட்டது’ என்றார்.

Related Stories: