முசிறி நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கூடுதல் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டுவது எப்போது?

* 50 ஆண்டுகளாக போராடும் மக்கள்

* கண்டு கொள்ளாத அதிமுக அரசு

முசிறி நகர மக்களுக்கு தினசரி தட்டுப்பாடின்றி குடிநீர் என்பது கானல் நீராகவே உள்ளது. முசிறி பேரூராட்சியில் தற்போதைய கணக்கின்படி 33 ஆயிரத்து 323 பேர் வசிப்பதாக குறிப்பேடுகள் தெரிவிக்கிறது. இங்கு வசிக்கும் மக்களுக்கு சுமார் 5 வருடங்களுக்கு முன்பு மழை வெள்ள காலங்களில் குடிநீர் வழங்குவது என்பது மிகவும் சவாலான பணியாக இருந்தது. ஏனென்றால் முசிறி காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீரை கரைக்கு எடுத்து வரும் குடிநீர் குழாய்கள் காவிரி ஆற்றில் வரும் மழை வெள்ளத்தினால் அடித்துச் சென்று விடும். அதனை சரி செய்து பின்னர் தண்ணீர் வழங்குவதற்குள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதும், போதும் என்றாகிவிடும். தமிழக அரசு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் முசிறி தேர்வுநிலை பேரூராட்சிகான குடிநீர் அபிவிருத்தி திட்டத்தினை முசிறி அருகே உள்ள செவந்தலிங்கபுரம் காவிரி ஆற்றில் சுமார் ரூ.21 கோடி மதிப்பில் செயல்படுத்தி உள்ளது.

இங்கிருந்து தினசரி முசிறி நகர மக்களுக்கான பயன்பாட்டிற்கு நீர் உந்து நிலையத்திலிருந்து சுமார் 30 லட்சம் லிட்டருக்கு மேலான தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கிருந்து அனுப்பி வைக்கப்படும் காவிரி குடிநீர் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள 7 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியிலும், தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள கலப்பு காலனியில் 2 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர் தேக்கத் தொட்டியிலும், வார சந்தையில் 2 லட்சம், உழவர் சந்தை அருகே 1 லட்சம், ஆலமரத்துப்பட்டியில் 1 லட்சம், மேல வடுகப்பட்டியில் 1 லட்சம், மலையப்பபரத்தில் 3 லட்சம், திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அருகில் 1 லட்சம், பேரூராட்சி அருகே 90 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள 9 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் 16.50 லட்சம் லிட்டர் அளவிலான தண்ணீர் இருமுறை ஏற்றப்பட்டு முசிறி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பகுதி வாரியாக விநியோகம் செய்யப்படுகிறது.

மின்தடை மற்றும் இயந்திர பழுது உள்ளிட்ட காலங்களில் முசிறி பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்படும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே முசிறி பேரூராட்சியில் தரைமட்ட நீர் சேமிப்பு தொட்டி தமிழக அரசு கட்டிக் கொடுத்தால் செவந்தலிங்கபுரத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் தண்ணீரை சேமித்து தினசரி தட்டுப்பாடின்றி தேவையான அளவு தண்ணீர் மக்களுக்கு வழங்க முடியும் என்பது இப்பகுதி சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது குறித்து முசிறியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கூறுகையில், முசிறி நகர மக்களுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட முடியாமல் இருந்து வருகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் தண்ணீரை பிடித்து வைத்துதான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

அவ்வாறு தினசரி குடிநீர் வழங்க வேண்டுமானால் தண்ணீரை சேமித்து வைப்பதற்கு முசிறி பேரூராட்சியில் நீர்த்தேக்க தொட்டிகள் கூடுதலாக தமிழக அரசு கட்டித்தர வேண்டும். பயன்பாட்டில் உள்ள குடிநீர் சேமிப்புத் தொட்டிகள் மூலம் தினசரி குடிநீர் வழங்க வேண்டுமானால் தற்போது குடிநீர் வழங்கப்படும் நேரத்தை குறைத்தால் தினசரி குடிநீர் வழங்க முடியும். ஆனால் போதிய குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே சுமார் 50 வருட காலமாக தினசரி பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்றார்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கணேசனிடம் கேட்டபோது, முசிறி பேரூராட்சி மக்களுக்கு தேவையான அளவு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்கி வருகிறோம்.

அதே வேளை செவந்தலிங்கபுரம் காவிரி ஆற்றிலிருந்து எடுத்து வரப்படும் தண்ணீரை அதிக கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் சேமிப்பு தொட்டி ஒன்றும், 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கட்டித் தரவேண்டும் என தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. அதே வேளை பொதுமக்களுக்கு வழங்கப்படும் காவிரி தண்ணீரை பலர் வீணடிப்பதையும், வீட்டுத் தோட்டத்திற்கு விடுவதையும் தண்ணீர் வரும்போது மோட்டார் வைத்து உறிஞ்சும் போக்கை கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜிடம் கேட்டபோது, தமிழக அரசு முசிறி பேரூராட்சிகான குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முசிறி மக்களுக்கான குடிநீர் தேவையை தீர்த்து வைத்துள்ளது. நீர் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் எடுத்து வரப்படும் தண்ணீரை அதிக கொள்ளளவு உள்ள குடிநீர் டேங்க்குகளில் சேமித்து வைத்து மக்களுக்கு தண்ணீர் தினசரி வழங்கிட ஏற்பாடு செய்யும் வகையில் தமிழக முதல்வரிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைத்து சிறப்பு நிதி பெற்று மேல் நிலை குடிநீர் தொட்டிகள், தரைமட்ட செம்புகள் கட்டித்தர உரிய முயற்சி எடுப்பேன் என்று கூறினார்.

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலரிடம் ஒருவரிடம் கேட்டதற்கு முசிறி பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை சிறப்பான முறையில் செயலாற்றி வருகிறோம். கூடுதலாக குடிநீர் தொட்டி அரசு கட்டித் தரும் நிலையில் முசிறி மக்களுக்கு போதிய அளவு தினசரி குடிநீர் வழங்க முடியும் என்பது உண்மைதான். முசிறியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு காவிரி குடிநீர் குழாய்க் இணைப்புகளும், சுமார் 300 இடங்களில் பொது காவிரி குடிநீர் குழாய் இணைப்புகளும் மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் வழங்கப்படும் நேரத்தை குறைத்தால் தினசரி தண்ணீர் வழங்க முடியும்.

ஆனால் தண்ணீர் வழங்கும் நேரத்தை குறைப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள். கூடுதல் நீர் சேமிப்புத் தொட்டிகள் எதிர்பாராமல் ஏற்படும் மின் தடை இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட தருணங்களில் தண்ணீரை அதிக அளவு சேமித்து வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிட உதவியாக இருக்கும் என்று கூறினார். எனவே பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் முசிறி நகர மக்களுக்கு தினசரி வழங்கப்படும் என தற்போதைய தமிழக அரசுக்கு அடித்தளமிட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்பதை தமிழக முதல்வர் ஏற்கத்தான் வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: