மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மருத்துவ கழிவு எரியூட்டும் தொழிற்சாலை அமைப்பு குறித்து கருத்து கேட்பு கூட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கெருகம்பாக்கம் கிராமத்தில் என்விரான் பயோ வேஸ்ட் பிரைவேட் சார்பில், மருத்துவ கழிவுகளை கையாளும் நிறுவனம் தொடங்க உள்ளது.  இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு நிறுவனம் சார்பில் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார்.இதில் பொதுமக்கள் கூறும்போது, ‘இப்பகுதியில் அமையவிருக்கும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் தொழிற்சாலையால் ஏற்படும் நச்சுக்கழிவுகளால் மக்களுக்கு ஆபத்து உள்ளது. மேலும், இந்த தொழிற்சாலைக்கு 100 பேரை வேலைக்கு தேர்வு செய்வதாக கூறியுள்ளனர்.

மேலும், இந்த தொழிற்சாலையில் விதிமீறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  அப்படி விதிமீறல் இருந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்’ என்றனர். இதற்கு பதில் அளித்து கலெக்டர் பொன்னையா கூறுகையில், ‘திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டுவரப்பட்டு அதை எரியூட்டி அழிக்கப்படும். இதனால், மக்களுக்கு பாதிப்புகள் ஏதும் இல்லை. அப்படி இந்த தொழிற்சாலையில் விதி மீறல்கள் ஏதும் இருந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தக்கூடாது.  எங்களுக்கு எழுத்துபூர்வமாக தெரிவிக்கலாம். நாங்கள் அதை விசாரித்து நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.

Related Stories: