லடாக் பகுதியில் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குழந்தைகளின் படிப்பு செலவை முழுவதுமாக திமுக ஏற்றுக்கும்: கனிமொழி எம்.பி உறுதி

தூத்துக்குடி: லடாக் பகுதியில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு கனிமொழி எம்.பி. திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (34). லடாக் பகுதியில் நாயக் ஆக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை ராணுவத்திற்கான வெடிபொருட்களை வாகனத்திற்கு மாற்றும்போது விபத்து ஏற்பட்டு கருப்பசாமி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து கருப்பசாமியின் மனைவி தமயந்தி (30) மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். கருப்பசாமிக்கு கன்யா (7), வைஷ்ணவி (5) என்ற இரு மகள்களும், ஒரு வயதில் பிரதீப்ராஜ் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் இரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கருப்பசாமி, கடந்த பிப்ரவரி மாதம் தான் மீண்டும் பணிக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவ வீரரின் மறைவுச் செய்தி குறித்த தகவல் அறிந்து இன்று காலை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெற்கு திட்டங்குளத்தில் உள்ள கருப்பசாமியின் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, திமுக சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியையும் வழங்கினார். அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்எல்ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர் முருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தனது உயிரை துச்சமென நினைத்து பணியாற்றச் சென்ற இடத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு வேண்டிய அனைத்து விதமான உதவிகளும் தி.மு.க சார்பில் செய்யப்படும். அதுமட்டுமன்றி கருப்பசாமியின் குழந்தைகள் மூன்று பேரும் படிப்பு செலவையும் முழுவதுமாக தி.மு.க ஏற்றுக் கொள்ளும் எனவும் கூறினார்.

Related Stories: