பிரதாப்கர் சாலை விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு!!

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு  ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம், பிரதாப்கர் அருகே பிரயாக்ராஜ்  லக்னோ நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிட்டதிட்ட மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர், காரின் பாகங்களை ‘காஸ் கட்டர்’ உதவியுடன் வெட்டி எடுத்து காரின் உள்ளே சிக்கி இருந்த 6 குழந்தைகள் உள்பட 14  பேரை சடலங்களாக மீட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பிரதாப்கரில் உள்ள குண்டாவைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள், நவாப்கஞ்சி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி வந்தபோது இந்த கோர விபத்து நடந்துள்ளது. சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத்,  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். கார் டிரைவர் தூங்கியதால், இந்த கோர விபத்து நடந்துள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: