எதிர்க்கட்சிகளின் ஊழல் குற்றச்சாட்டால் முடிவு: பீகாரில் பதவியேற்ற மூன்றே நாளில் கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா: முதல்வர் நிதிஷுக்கு முதல் சறுக்கல்

பாட்னா:  ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பீகார் கல்வி அமைச்சர் பதவியை மேவா லால் சவுத்ரி ராஜினாமா செய்துள்ளார்.  பீகார் மாநிலத்தின்  முதல்வராக  நிதிஷ் குமார் 4வது முறையாக கடந்த திங்களன்று பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் மேவா லால் சவுத்ரிக்கு கல்வித்துறை அமைச்சர்  பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேவா லால் சவுத்ரிக்கு அமைச்சர்  பதவி  வழங்கப்பட்டுள்ளதை ராஷ்டிரிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சித்தது. நிதிஷ் குமாரின்  ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கடந்த ஆட்சியின்போது  பீகார் வேளாண் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக மேவா லால் இருந்தார். அப்போது, 161 உதவி பேராசிரியர்கள் மற்றும் ஜூனியர் விஞ்ஞானிகள் நியமனத்தில் முறைகேடு செய்தது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவானது.

மேலும், சபவுர் வேளாண் பல்கலைக் கழக வளாகம் கட்டப்பட்டதிலும் முறைகேடு செய்ததாக அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பீகார் கவர்னராக இருந்தபோது, மேவா லால் மீதான புகார் குறித்து விசாரணை தொடங்கியது. இதில், அவர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு எதிராக இதுவரை குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில்தான், நிதிஷ் அமைச்சரவையில் அவர் கல்வித் துறை அமைச்சராக பதவியேற்றார். இதை ராஷ்டிரிய ஜனதா தலைவரும், பீகார் மாநில பிரதான எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்தார். நாடு முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, பதவியேற்ற மூன்றே நாட்களில் தனது அமைச்சர் பதவியை மேவா லால் நேற்று ராஜினாமா செய்தார்.

அதை ஆளநர் பாகு சவுகான் உடனடியாக ஏற்றுக் கொண்டார். அவருக்கு பதிலாக, கட்டுமானத் துறை அமைச்சர் அசோக் சவுத்ரியிடம் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கவும் உத்தரவிட்டார். மேவா லாலின் ராஜினாமா, முதல்வர் நிதிஷ் அரசுக்கு ஏற்பட்ட முதல் சறுக்கலாக கருதப்படுகிறது. ராஜினாமா குறித்து மேவா லால் சவுத்ரி கூறுகையில், “குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டாலோ அல்லது நீதிமன்றம் உத்தரவிட்டாலோ தான் குற்றம் செய்தது ஊர்ஜிதமாகும். எனக்கு எதிரான குற்றச்சாட்டில் இது இரண்டுமே இல்லை. இருப்பினும், பதவியை ராஜினாமா செய்துள்ளேன்,” என்றார்.  

தேசிய கீதம் தெரியாத அமைச்சர்

ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பாக நேற்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதில், நிகழ்ச்சி ஒன்றில் மேவா லால் சவுத்ரி தேசியக்கொடியை ஏற்றுகிறார். அருகில் சிறுவர்கள் மற்றும் சிலர் உள்ளனர். அதில், தேசிய கீதத்தை மேவா லால் தவறாக உச்சரித்து பாடுவது இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தளம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பீகார் கல்வி அமைச்சர் மேவா லால் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. தேசிய கீதம் கூட பாடத் தெரியாத அவருக்கு முதல்வர் நிதிஷ் அமைச்சர் பதவியை வழங்கி இருக்கிறார்,’ என கிண்டல் செய்துள்ளது.

Related Stories: