அதானி துறைமுகத்தை முற்றுகையிட்டு டிரைலர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்தை முற்றுகையிட்டு டிரைலர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி துறைமுகம் இயங்கி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் மின்னணு சாதனங்கள், உணவு, மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் டிரைலர் லாரி மூலம் அனுப்பப்படுகிறது.  இந்நிலையில் டிரைலர் லாரி உரிமையாளர்கள் அதானி துறைமுகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். துறைமுகத்தில் இருந்து சரக்கு பெட்டகங்களுக்கு அனுப்பப்படும் லாரிகளில் அதிகபாரம் ஏற்றிவைப்பதாக டிரைலர் லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

டிரைலர் லாரிகளில் விதிகளை மீறி ஒரு கன்டெய்னர் பெட்டிக்கு பதிலாக 2 கன்டெய்னர் பெட்டிகளை ஏற்றிச்செல்ல துறைமுக நிர்வாகம் வற்புறுத்துவதாக குற்றம் சாட்டினர். லாரிகளில் அதிகபாரம் ஏற்றி செல்வதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து  ஏற்படும் அபாயம் உள்ளது. லாரிகளில் அதிகபாரம் ஏற்றிச்செல்வதால் சாலைகளும் விரைவில் சேதமடைவதாக கூறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். துறைமுக அதிகாரிகளிடம் பிரச்சனைகள் குறித்து லாரி உரிமையாளர்கள் மனு அளித்தனர். துறைமுக நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து லாரி உரிமையாளர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: