உயிரிழப்பு நாள்தோறும் அதிகரிப்பு ஆன்லைன் சூதாட்டம் தடைக்கு சட்டம் இயற்றுவது எப்போது?: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை, அண்ணாநகரைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடுவது அதிகரித்துள்ளது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை ெசய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் சரண் ரங்கராஜன், ‘‘தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சட்டசபை கூட்டப்படாததால், உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. சட்ட வரைவு தயாரிப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ஆன்லைன் சூதாட்டத்தால் நாள்தோறும் உயிர்பலி ஏற்படுகிறது. மக்களால் நேசிக்கப்படும் பிரபலங்கள் ஆன்லைன் சூதாட்டங்களை விளம்பரப்படுத்துகின்றனர். குறிப்பாக சினிமா நட்சத்திரங்களை ஏராளமான இளைஞர்கள் பின்பற்றுகின்றனர். இனிமேலாவது உயிரிழப்பை தடுக்க வேண்டியது அவசியம். இதற்காக சட்ட நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டியது அவசியம். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும்? சட்டம் இயற்றப்படுமா, விதியாக அமல்படுத்தப்படுமா என்பது குறித்து அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: