மத்திய அரசின் அனைத்து உத்தரவுக்கும் முதல்வர் அடிபணிந்தால் திமுக வாய்பொத்தி வேடிக்கை பார்க்காது: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மத்திய அரசின் அனைத்து உத்தரவுக்கும் முதல்வர் அடிபணிந்தால் திமுக வா்ய்பொத்தி வேடிக்கை பார்க்காது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.   தருமபுரி மாவட்ட திமுக சார்பில் தமிழகம் மீட்போம்-2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் இன்பசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து காணொலி மூலம் பேசியதாவது:  இந்த மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.அன்பழகன் தான் உயர்கல்வித் துறைக்கு அமைச்சராக இருக்கிறார்.  அண்ணா பல்கலைக்கழகத்தையே தமிழக அரசுக்குச் சொந்தமில்லாமல் தனியாக மடைமாற்றம் செய்ய துணைவேந்தர் சூரப்பா முயற்சி செய்தது அமைச்சர் அன்பழகனுக்குக் களங்கம் அல்லவா?  உயர்கல்விச் செயலாளரது ஒப்புதலோடுதான் இந்த முயற்சிகளைச் செய்தேன் என்று சூரப்பா சொன்னாரே, அதற்கு அன்பழகனின் பதில் என்ன? அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது பதவிக் காலத்தில் உயர்கல்வித்துறையையும் காப்பாற்றவில்லை.

 ஸ்டாலின் என்ன சாதனை செய்திருக்கிறார் என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் என்ன சாதித்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்களிடம் கேளுங்கள். எந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நான் தொடக்கி வைத்தேனோ, ஜப்பான் சென்று அடிப்படைப்பணிகளைச் செய்து கொடுத்தேனோ, சுமார் 80 சதவிகித பணிகள் முடியக் காரணமாக இருந்தேனோ, அந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்துங்கள் என்று நானே போராடும் சூழ்நிலையை ஏற்படுத்திய இரக்கமற்ற அரசுதான் இந்த அதிமுக அரசு. மக்களின் குடிநீர்த் தேவைகளுக்காகக் கொண்டு வந்த திட்டத்தைக் கூட அரசியல் நோக்கத்தோடு முடக்கிய மிக மோசமான அரசு இந்த அரசு. கலைஞருக்குப் புகழ் கிடைத்துவிடும், ஸ்டாலினுக்குப் பேர் கிடைத்துவிடும் என்ற குறுகிய நோக்கத்தோடு அரசியல் நடத்தும் சிறுமதியாளர்கள் கையில் கோட்டை போய்விட்டது.

 விவசாயம் பற்றி, வேளாண்மை பற்றி நான் பேசக் கூடாது என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமி யார்? அவர் என்ன சர்வாதிகாரியா? இந்த நாட்டில் வாய்ப்பூட்டுச் சட்டம் அமலில் இருக்கிறதா? கோடிக்கணக்கில் அரசாங்க கஜானாவைக் கொள்ளை அடித்துக் கொண்டு, மத்திய பாஜ அரசின் அனைத்து உத்தரவுக்கும் அடிபணிந்து எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்றால், அதைக் கைகட்டி, வாய்பொத்தி திமுக வேடிக்கை பார்க்காது. எந்த அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு இனத்தைக் காக்கும் எக்கு மனிதர்களைக் கொண்ட இயக்கம் திமுக. ஒரு கையால் எதிரிகளின் பகை முடிப்போம். மறுகையால் தமிழினத்துக்கு வாழ்வளிப்போம். வெற்றிபெறுவோம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வ.உ.சியை நினைவு நாளில் போற்றி வணங்குவோம்: மு.க.ஸ்டாலின் முகநூலில் பதிவு

தியாக தலைவர் வ.உ.சியை அவரது நினைவுநாளான இன்று போற்றி வணங்குவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு மகத்தானது. தீரமும் தியாகமும் மிகுந்த விடுதலைப் போரில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் போராட்டமும், அதற்காக அவர் அனுபவித்த சிறைக் கொடுமையும் வரலாற்றின் பக்கங்களில் நிறைந்திருக்கிறது.

வெள்ளையர் ஆட்சிக்கெதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நடத்திய அவரது துணிவான முடிவு, இன்றைய கார்ப்பரேட் காலத்தில் தொழில் முனைவோராக முயற்சிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாகும். அதிகார வர்க்கம் எந்த வகையில் உரிமைப் போரை நசுக்கும் என்பதற்கு வ.உ.சியின் கப்பல் நிறுவனத்தை முடக்கியதும், அவருக்குச் சிறையில் கொடுக்கப்பட்ட செக்கிழுத்தல் கல் உடைத்தல் போன்ற கடும் தண்டனைகளும் ரத்தச்சரிதமாக பதிவாகி உள்ளது.

தாயக விடுதலைக்கும், தமிழ்த் தொண்டுக்கும் தன் தனிவாழ்வு, குடும்பம், சொத்து அனைத்தையும் அர்ப்பணித்த மகத்தான தியாகி வ.உ.சிதம்பரனார். அவர் தனது இறுதிக்காலத்தில், திராவிட இயக்கத் தலைவர்களுடன் சேர்ந்து பயணித்ததும், கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் வ.உ.சியின் நினைவைப் போற்றி, அவர் குடும்பத்தினரைக் கவுரவித்து, வ.உ.சி. இழுத்த செக்கினை பொதுமக்கள் காணும் வகையில் செய்து தியாக வரலாறு நினைவூட்டப்பட்டது. என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய தியாகத் தலைவர் வ.உ.சியை அவரது நினைவுநாளான (நவம்பர் 18) போற்றி வணங்குகிறேன். இவ்வாறு முகநூலில் கூறியுள்ளார்.

Related Stories: