தீபாவளிக்கு சீன பொருட்களை புறக்கணித்த 71% இந்தியர்கள்

புதுடெல்லி: லடாக் எல்லை பிரச்னைக்கு பிறகு, சீன பொருட்களுக்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளனர். மொபைல் ஆப்ஸ் மட்டுமின்றி, சீன பொருட்களுக்கு மாற்றான இந்திய தயாரிப்புகளுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை பட்டியலிட்ட அகில இந்திய வர்த்தகர்கள் சங்கத்தினர், இதற்கு மாற்றாக இந்திய பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் சீன பொருட்களை மக்கள் புறக்கணித்தது சர்வே மூலம் தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் 204 மாவட்டங்களில் 14,000 பேரிடம் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 29 சதவீதம் பேர் மட்டுமே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சீன தயாரிப்புகளை வாங்கியுள்ளனர். அதிலும் இவர்களில் 11 சதவீதம் பேருக்கு, அது சீன தயாரிப்பு என வாங்கிய பிறகுதான் தெரிய வந்துள்ளது.

 எலக்ட்ரானிக் பொருட்களை பொறுத்தவரை கடந்த சுமார் 20 ஆண்டாகவே சீன தயாரிப்புகள்தான் இந்திய சந்தையை ஆக்கிரமித்து வந்துள்ளன. மலிவு என்பதால் மக்கள் அவற்றின்பால் ஈர்க்கப்பட்டனர். ஆனால், இந்த தீபாவளிக்கு சீன பொருட்களை வாங்கியவர்களில் 75 சதவீதம் பேர், சீன தயாரிப்பு என தெரிந்திருந்தாலும், கொடுக்கும் பணத்துக்கு உரிய மதிப்புடையதாகவும், இந்திய தயாரிப்பை விட தனிப்பட்ட சிறப்பு உடையதாகவும் இருப்பதால் மட்டுமே அவற்றை வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: