கொட்டித் தீர்த்தது வடகிழக்கு பருவமழை களக்காடு ஆறுகளில் கரைபுரளுது வெள்ளம்: வாறுகால் அடைப்பால் ஏர்வாடியில் வீடுகள், கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது

களக்காடு: களக்காடு, மாவடி, திருக்குறுங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் தாழ்வான பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது. களக்காடு மேற்குத்தொடர்ச்சி மழையிலும் மழை பெய்ததால் களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால், பச்சையாறு, உப்பாறு, திருக்குறுங்குடி நம்பியாறு மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறு மற்றும் கால்வாய்களில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்தோடியது. களக்காடு - சிதம்பரபுரம் செல்லும் சாலையில் நாங்குநேரியான் கால் மீதுள்ள பாலத்தின் மீது வெள்ளம் சென்றது.

களக்காடு - தலையணை சாலையில் ஐந்து கிராமம் அருகில் உள்ள பாலமும் தண்ணீரில் மூழ்கியது. இதையடுத்து அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. களக்காடு பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா, சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம், வேலு மற்றும் ஊழியர்கள் பாலங்களில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். வெள்ளம் தணிந்ததும் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. கால்வாய்கள் மூலம் குளங்களுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏர்வாடியில் பெய்த கனமழையால் வணிகர் தெருவில் உள்ள வாறுகால் நிரம்பி சாக்கடை கலந்த மழை நீர் விநாயகர் கோயில் மற்றும் வீடுகளில் புகுந்தது. வடக்கு மெயின் ரோட்டில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இந்நிலை நீடித்தாலும், இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வடக்கு மெயின் ரோட்டில் மேற்புறம் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி வாறுகாலை தூர்வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தகவலறிந்த ஊர்வாடி பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், துய்மை பணியாளர்களை உடனடியாக அனுப்பி தற்காலிகமாக மேற்புறமுள்ள மடையை உடைத்து விட்டனர். இதனால் சிறிது நேரத்தில் மழை தண்ணீர் வெளியேறியது.

சிவகிரி, வாதேவநல்லூர் பகுதியில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கனமழையின் போது சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. கடைவீதிகளில் கனமழையால் கீழரதவீதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராஜசிங்கப்பேரி குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இக்குளம் சிவகிரி குளத்தின் தாய் குளமாக திகழ்கிறது. ராஜசிங்கப்பேரி கிளை குளங்களுக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். விவசாயிகள் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

* கால்வாய் கரை உடைந்து 1 ஏக்கர் நெற்பயிர் சேதம்

பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாபநாசம், வி.கே.புரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளமும் கால்வாயில் கலந்தது. இதனால் வி.கே.புரம் டாணா அனவன்குடியிருப்பு பகுதியில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய் கரை உடைந்து அருகில் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெய் பயிர்கள் சேதமானது.

* பாபநாசம் நீர்மட்டம் 109 அடியானது

பாபநாசம் அணையில் நேற்று மாலை நிலவரப்படி அதிகபட்சமாக 13.4 செ.மீ (134 மிமீ) மழை பதிவாகி இருந்தது. இதனால் நேற்று காலை 8 மணிக்கு 101.50 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மாலை 6 மணிக்கு 109 அடியாக உயர்ந்தது. இதேபோல மணிமுத்தாறு அணைப்பகுதியிலும் 6.24 செமீ (62.4 மிமீ) மழை பதிவானது.

Related Stories: