உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறி பயிரை தாக்கும் மர்ம நோய்: கலக்கத்தில் விவசாயிகள்

கூடலூர்: உருளைக் கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறி பயிர்களை மர்ம நோய் தாக்கி வருவதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் பைக்காரா, அனுமாபுரம், டி.ஆர். பஜார், அப்பர் புராஸ்பெக்ட், நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக இப்பயிர்களை மர்ம நோய் வேகமாக தாக்கி வருவதால் பயிர்கள் வாடி  சுருங்கி வருகின்றன. இந்த நிலையில் இப்பகுதி விவசாயிகள் உருளைக் கிழங்கு விவசாயம் மேற்கொண்டு இரண்டு மாதங்கள் ஆகின்றன.

இன்னும் 30 முதல் 40 நாட்கள் கழித்து அறுவடை நடைபெற வேண்டும். ஆனால் நோயின் தாக்கத்தால் செடிகள் வாடி வருவதால் உருளைக்கிழங்கு உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஒருவித பூச்சியின் தாக்கத்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை உருளைக்கிழங்கு விவசாயத்தில் இப்பிரச்சனையை இப்பகுதி விவசாயிகள் சந்தித்ததில்லை. விதை, உரம், மருந்து வகைகள் உள்ளிட்டவற்றை கடனாக வாங்கி விவசாயம் செய்துள்ள நிலையில் தற்போது மர்ம நோய் தாக்கி பயிர்கள் அழிவதால் செய்த முதலீடு கூட விவசாயிகளுக்கு மிஞ்சாது. எனவே இப்பகுதிகளில் தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: