கமுதி பகுதியில் நலிவடைந்து வரும் பனை ஓலை தொழில்; வாழ்வாதாரம் இன்றி தொழிலாளர்கள் தவிப்பு

கமுதி: கமுதி பகுதியில் பனை ஓலை தொழில் நலிவடைந்து வருவதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆதிதிராவிடர் தெருவில் பனை ஓலை தொழில் செய்யும் 100 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் பனைஓலை, மட்டையில் பெட்டி, கொட்டான், சோளகு போன்ற பொருட்களை தயார் செய்து வருகின்றனர். பனை ஓலை மூலம் தயாரிக்கப்படும் பொருள்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதால், இந்த தொழிலும் நலிவடைந்துள்ளது. இதனால் இத்தொழிலை நம்பியுள்ளவர்கள் வாழ்வாதாரம் இன்றி பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து பனை ஓலை தொழிலாளி தனுஷ்கோடி கூறுகையில், ‘கமுதி பகுதியில் பனை மரங்கள் அளிக்கப்பட்டதால், பொருள்கள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களான ஓலை, மட்டை போன்றவற்றை 40 கி.மீ. தூரத்தில் உள்ள சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வாங்கி வர வேண்டியுள்ளது.

மூலப்பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. இதனால் இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. கொரனாவால் திருவிழாக்கள் நடைபெறாததால் பனை ஓலைப்பெட்டி விற்பனை குறைந்துள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில்  பனை ஓலை பொருட்களை கொள்முதல் செய்யும் அரசு கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. இதனால் எங்களது தொழில் சீராக நடைபெற்று வந்தது. பல வருடங்களாக பனை ஓலை பொருட்களை அரசு கொள்முதல் செய்யவில்லை. இதனால் அபிராமம், பரமக்குடி, பார்த்திபனூர், முதுகுளத்தூர் போன்ற பகுதிகளில் இந்த தொழில் முற்றிலும் அழிந்துவிட்டது. கமுதி பகுதியில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன. பனை ஓலை தொழிலுக்கு கடனுதவி வழங்கி அழியும் நிலையிலுள்ள இத்தொழிலை காக்க அரசு முன்வர வேண்டும்’ என்றார்.

Related Stories: