ஏழு மாநிலங்கள் வெடிக்க விதித்த தடையால் ரூ.600 கோடி பட்டாசுகள் தேக்கம்: மீண்டும் உற்பத்தியை தொடங்க உரிமையாளர்கள் தயக்கம்; லட்சக்கணக்கான தொழிலாளர் வேலையிழக்கும் அபாயம்

சிவகாசி: டெல்லி, ஒடிசா உட்பட 7 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதால் சிவகாசியில் ரூ.600 கோடி பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளது. பட்டாசு உற்பத்தியை உடனடியாக தொடங்க உரிமையாளர்கள் தயங்குவதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்து 70 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் சிவகாசி பட்டாசுகள் 95 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் ராஜஸ்தான், டெல்லி, ஒடிசா, சிக்கிம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 7 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சிவகாசியில் ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளன. எனவே பட்டாசு உற்பத்தியை உடனடியாக தொடங்க உரிமையாளர்கள்  தயங்குகின்றனர். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் கணேசன் கூறுகையில், ‘‘கொரோனா பாதிப்பு காரணமாக சிவகாசியில் 70 சதவிகித பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. ரூ.1,400 கோடி பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டன.

7 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை காரணமாக  ரூ.600 கோடி பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளன. தடை விதித்த மாநில அரசுகள் அடுத்து வருகிற புது வருடபிறப்பு, திருவிழா, திருமண நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்படும். பொதுவாக தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் மீண்டும் பட்டாசுகள் உற்பத்தியை துவங்கி விடுவோம். தற்போதைய பட்டாசு தேக்கம் காரணமாக இந்த முறை பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகுதான் உற்பத்தி பணியை துவங்க உள்ளோம்’’ என்றார்.

Related Stories: