திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் நாளை தொடக்கம்: வெள்ளி விமானங்கள் சீரமைக்கும் பணி தீவிரம்; மாடவீதியில் சுவாமி திருவீதிஉலா ரத்து

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, சுவாமி திருவீதி உலா வாகனங்கள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. தீபத்திருவிழாவின் தொடக்கமாக, எல்லை தெய்வ வழிபாடு 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, துர்க்கை அம்மன் உற்சவம் நாளை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் (18ம் தேதி) பிடாரியம்மன் உற்வசவமும், 19ம் தேதி விநாயகர் வழிபாடும் நடைபெறும்.

அதைத்தொடர்ந்து, 20ம் தேதி காலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா கொடியேற்றம் நடைபெறும். இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இந்தாண்டு தீபத்திருவிழாவில் மாட வீதியில் சுவாமி திருவீதி உலா நடைபெறாது எனவும், அதற்கு மாற்றாக கோயில் 5ம் பிரகாரத்தில் வீதி உலா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்களும் ஒவ்வொரு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதியில் பவனி வருவது வழக்கம். ஆனால், கோயில் 5ம் பிரகாரத்தில் வழக்கமாக பயன்படுத்தப்படும் திருவீதி உலா வாகனங்களை பயன்படுத்த போதுமான இட வசதியில்லை. எனவே, பஞ்ச மூர்த்திகள் பவனிக்காக வெள்ளி விமானங்களை பயன்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதையொட்டி, வெள்ளி விமானங்களை சீரமைத்து புதுப்பொலிவு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

* விடுமுறையால் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

தீபாவளி திருநாள் கொண்டாட்டம் மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் அமைந்ததால், அண்ணாமலையார் கோயிலில் நேற்று வழக்கத்தைவிட பக்தர்கள் வருகை அதிகரித்திருந்தது. அதனால், கோயில் ராஜகோபுரம் வெளிப்பிரகாரம் வரை பக்தர்கள் வரிசை நீண்டிருந்தது. சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்கள் விரைவாக தரிசனம் முடித்து திரும்பினர். கொரோனா விழிப்புணர்வு நடைமுறையை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, சுவாமி சன்னதி, அம்மன் சன்னதியை மட்டுமே தரிசனம் செய்ய முடிகிறது. மற்ற பிரகாரங்களில் உள்ள சன்னதிகளை தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

Related Stories: