ராயக்கோட்டை அருகே ஊடேதுர்கம் வனப்பகுதியில் ஆண் யானை மர்மச்சாவு: வனத்துறையினர் விசாரணை

தேன்கனிக்கோட்டை: ராயக்கோட்டை அருகே, ஊடேதுர்கம் வனப்பகுதியில் ஆண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ஊடேதுர்கம் வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. தற்போது ராகி அறுவடை சீசன் என்பதால், யானைகள் இரவு நேரங்களில் கிராமங்களில்  நுழைந்து ராகி பயிர், தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ், வாழை உள்ளிட்ட பயிர்களை தின்று நாசப்படுத்தி செல்கின்றன. இந்நிலையில், நேற்று காலை ஊடேதுர்கம் கவிபுரம் வனப்பகுதியில், ஆண் யானை ஒன்று மர்மமான முறையில், இறந்து கிடப்பதாக ஒசூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில், மாவட்ட வன அலுவலர் பிரபு, ஓசூர் வனச்சரக அலுவலர் ரவி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு இறந்து கிடந்த யானைக்கு 30 முதல் 35 வயது இருக்கும். இதை தொடர்ந்து, கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். வனப்பகுதியில், விட்டு விட்டு மழை பெய்ததால் பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஏற்பட்டது. பின்னர், இறந்த யானையின் தந்தங்களை சேகரித்து கொண்டு, குழி தோண்டி அதன் உடலை புதைத்தனர். மேலும், யானை நோய்வாய் பட்டு இறந்தா அல்லது வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்டதா என, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: