பாஜ நிர்வாகிகளை கைது செய்ய கோரி செல்போன் டவரில் ஏறி விசிக பிரமுகர் போராட்டம்

திருப்போரூர்:கேளம்பாக்கம் அடுத்த கோவளத்தை சேர்ந்தவர் தர் (எ) அக்னியன் (45). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர். நேற்று முன்தினம் இரவு தர், அதே பகுதியில் உள்ள ஒரு செல்போன் டவர் மீது ஏறினார். அங்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசிய அனுமன் சேனா தர் மற்றும் கேளம்பாக்கத்தில் நடிகை குஷ்புவை கைது செய்தபோது, அங்கு வந்த பாஜ பிரமுகர் படூர் புருஷோத்தமன், திருமாவளவனை அவதூறாக பேசினார். அவர்கள் 2 பேரையும் உடனே கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தற்கொலை செய்வதாக கூறி கோஷமிட்டார்.

தகவலறிந்து கேளம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, டவர் மீது ஏறிய தரிடம் செல்போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், சிறுசேரி தீயணைப்பு நிலைய மீட்புப்படையினர் வந்து, செல்போன் டவரில் ஏறி, அவரைக் காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர். இதைதொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மண்டல செயலாளர் விடுதலைச் செழியன், ஒன்றிய துணை செயலாளர் சிறுத்தை கிட்டு, வடக்கு ஒன்றிய செயலாளர் விடுதலை நெஞ்சன் ஆகியோர் அங்கு வந்து தரிடம், போராட்டத்தைக் கைவிடுமாறு கூறினர்.

ஆனால், டவரின் உச்சிக்கு சென்ற தர், யாராவது மேலே வந்தால் கீழே குதிப்பதாக கூறினார். பின்னர், கேளம்பாக்கம் போலீசார், அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும், பாஜ பிரமுகர் புருஷோத்தமன் மீது வழக்கு பதிவு செய்வதாகவும் உறுதியளித்தனர். பின்னர் அவர் கீழே இறங்கினார்.

Related Stories: