தி.மலை ஏடிஎம்மில் செல்லாத ரூ.500 நோட்டு; பெண் அதிர்ச்சி: பணத்தை மாற்றித்தர வங்கி ஊழியர் மறுப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை புதுத்தெருவைச் சேர்ந்தவர் கல்பனா(32). இவர், தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிகிறார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி காலை திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் ஏடிஎம் மையத்தில், ₹3,500யை கல்பனா எடுத்துள்ளார். அதில், அரசு செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ₹500 நோட்டு ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வங்கிக்கு நேற்று நேரில் வந்து செல்லாத நோட்டை மாற்றித்தர வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால், ஏடிஎம் இயந்திரத்தில் செல்லாத நோட்டை வைக்க வாய்ப்பு இல்லை, பணம் எடுக்கும் போதே சரிபார்க்காமல் 4 நாட்களுக்கு பிறகு தெரிவிப்பதால் பணத்தை மாற்றித்தர முடியாது என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடந்த 8ம் தேதி ஏடிஎம் மையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தனர். அதில், தனியார் பள்ளி ஊழியர் கல்பனா, பணம் எடுப்பது பதிவாகியிருந்தது. ஆனால், பழைய ₹500 நோட்டு எடுத்ததற்கான தெளிவான காட்சிகள் பதிவாகவில்லை. எனவே, வங்கி நிர்வாகம் பணத்தை மாற்றித்தர மறுத்துவிட்டது. அதனால், அந்த பெண் ஏமாற்றத்துடன் திரும்பினார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: