டெல்லி மயூர் விகார் ஃபேஸ்-3 பகுதியில் கட்டப்பட்டுள்ள 8வது தமிழ் பள்ளியை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று (12.11.2020) தலைமைச் செயலகத்தில், டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியில் உள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.

தலைநகர் டெல்லியில் கடந்த 90 ஆண்டுகளாக டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்தால் ஏழு இடங்களில் மொழிவாரி சிறுபான்மையின மேல்நிலைப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இப்பள்ளிகளில், முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடமாகவும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் விருப்பப் பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் பயிலும் சுமார் 7,500 மாணாக்கர்களில் 85 சதவிகிதம் தமிழர்கள் ஆவர். இப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் தமிழ்ப் பாடப் புத்தகங்களை விலையில்லாமல் வழங்கி வருகிறது.

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். பெருகிவரும் தமிழ் மக்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு, டெல்லி வளர்ச்சிக் குழுமத்தால், டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்திற்கு மயூர் விகாரில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மயூர் விகாரில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிதியுதவி வேண்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் டெல்லித் தமிழ்க் கல்விக் கழகம் கோரிக்கை வைத்தது. அக்கோரிக்கையினை கனிவுடன் ஏற்று, டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியில் உள்ள மயூர் விகாரில் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டடத்திற்கு  தமிழ்நாடு அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து, கடந்த 26.10.2018 அன்று மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பெயரில் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டடத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள்.

டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியில் உள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். இப்புதிய பள்ளிக் கட்டடம் 6515 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்  துறை அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன், மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன், புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி திரு.என். தளவாய் சுந்தரம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திருமதி பா.வளர்மதி, தலைமைச் செயலாளர்

திரு.க. சண்முகம்,இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்

திரு.தீரஜ் குமார், இ.ஆ.ப., புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் திரு. ஹிதேஷ்குமார் எஸ். மக்வானா, இ.ஆ.ப., புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையர் திரு.ஆஷிஷ் வச்சானி, இ.ஆ.ப., பள்ளிக் கல்வி ஆணையர் திரு.என். வெங்கடேஷ், இ.ஆ.ப., பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன், டெல்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: