காட்டு ராஜாவுக்கே இந்த கதியா? நைஜீரியாவில் பரிதாபம்

கடுனா: காட்டு ராஜா என்று அழைக்கப்படும் சிங்கத்தின் அழகே அதன் கம்பீரமான தோற்றம்தான். அது மிருகக்காட்சி சாலையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அதன் கெத்து மாறுவதில்லை. ஆனால், நைஜீரியாவில் உள்ள ஒரு மிருகக் காட்சி சாலையில் இருக்கும் சிங்கத்தின் நிலை ரொம்பவும் சோகமாக உள்ளது. நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்தில் உள்ளது காம்ஜி கேட் மிருகக் காட்சி சாலை. அங்கு விலங்குகளைப் பார்வையிடச் சென்றார் ஒரு சுற்றுலாப்பயணி. அங்கு இருந்த சிங்கத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆய்வுக்கூடங்களில் விலங்குகளின் மாதிரிகளை எலும்பும், தோலுமாக வைத்திருப்பது போல நிஜ சிங்கம் ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது.

போதுமான உணவு அளிக்கப்படவில்லை என்பது நன்றாகத் தெரிந்ததால், இந்த விஷயம் உலகுக்குத் தெரியட்டும் என்று புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த படத்தைக் கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபோல் இன்னும் பல விலங்குகள் அங்கு போதுமான உணவு அளிக்கப்படாமல் பட்டினி போடப்பட்டிருக்கலாம் என்றும் புகைப்படம் எடுத்த அந்த அடையாளம் தெரியாத நபர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘தற்போது செய்தி வெளியான பிறகு அந்த சிங்கம் மீட்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளது. இதேபோல் பட்டினி கிடக்கும் மற்ற விலங்குகளையும் மீட்கும் முயற்சியில் உள்ளனர். மிருகக் காட்சி சாலையில் உள்ள மற்ற மிருகங்களுக்கு உணவு அளிப்பதற்கான தன்னார்வலர்களையும் இணைத்துக் கொள்ள நைஜீரிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்’ என்றார்.

Related Stories: