தேனி மாவட்டத்தில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு நீடிப்பு: நோயாளிகள் அவதி

தேனி: கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கட்டும், தேனி மாவட்டத்தில் முக்கிய மருந்து, மாத்திரைகளுக்கான தட்டுப்பாடு நீடிக்கிறது. இதனால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் சர்க்கரை, இருதயம், மூளை நரம்பியல், ரத்தக்கொதிப்பு, கேன்சர் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உடல் திறன், நோயின் தன்மை, வயது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு டாக்டர்கள் சில வகை மருந்துகளை தொடர்ந்து சாப்பிட வலியுறுத்தியுள்ளனர். இந்த மருந்துகளில் பல மும்பையில் இருந்து வர வேண்டி உள்ளது.

சில கல்கத்தா, டில்லி, குஜராத் போன்ற ஊர்களிலிருந்தும், சில மருந்துகள் வெளிநாடுகளில் இருந்தும் வர வேண்டியுள்ளது. கொரோனா ஊரடங்கின்போது இந்த மருந்து, மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு 4 மாதங்களை கடந்த நிலையிலும், மருந்துகள் தட்டுப்பாடு தொடர்கிறது. குறிப்பாக நாட்டின் பல பகுதிகளில் மருந்து உற்பத்தி முழுமையாக இல்லை. மருத்துவமனைகள் ஆர்டர் கொடுக்கும் மருந்துகளை பல நாட்கள் தாமதமாகவே சப்ளை செய்கின்றனர். அதுவும் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்யவில்லை.

வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்து பொருட்களின் நிலையும் இது தான். இதனால் டாக்டர்கள் தற்காலிகமாக வேறு மருந்துகளை கொடுத்து சமாளிக்கின்றனர். இருப்பினும் நோயாளிகள் சிலருக்கு குறிப்பிட்ட சில மருந்துகள் தான் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலை சீராக இன்னும் சில மாதங்கள் கூட ஆகலாம். மருந்துகள் தயாரிப்பில் உலகளவில் இந்தியா முன்னனியில் உள்ள நாடு. தமிழகமும் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. ஆனால் மூலப்பொருட்கள் பல வெளிநாடுகளில் இருந்து வர வேண்டி உள்ளது.

விமான சேவை சீராகாத நிலையில், மூலப்பொருட்கள் வரத்து பாதிக்கப்பட்டிருப்பதும், தொழில்நுட்ப பணியாளர்–்கள் உரிய முறையில் பணியாற்ற முடியாத சூழல் இருப்பதும் இதற்கு முக்கிய காரணம். இந்த நிலை ேதனி மாவட்டத்தில் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் நிலவுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories: