தீபாவளிக்கு சொந்தஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக கோவை கொடிசியாவில் தற்காலிக பஸ் நிலையம்: நாளை முதல் செயல்படும்

கோவை: தீபாவளி பண்டிகைக்கு சொந்தஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக கோவை கொடிசியாவில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது, நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ளனர். பயணிகளின் வசதிக்காக காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, சேலம், திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் போன்ற பகுதிகளுக்கும் மற்றும் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருநெல்வேலி, ராஜாபாளையம், குமுளி, தேனி ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதனால், நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தின் சார்பில், கொடிசியா வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையம் நாளை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இங்கிருந்து, சேலம், சேலத்தை கடந்து செல்லும் வழித்தட பஸ்கள் மற்றும் திருச்சி, திருச்சியை கடந்து செல்லும் வழித்தட பஸ்களும் மற்றும் கூடுதலாக சேலம் மற்றும் திருச்சிக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. பயணிகளுக்கு தேவையான தற்காலிக நிழற்குடை, குடிநீர் வசதி மற்றும் மொபைல் கழிப்பறை வசதிகளும் தற்காலிக பஸ் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: