தமிழக மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை நீதி விசாரணை கோரி கேரள நீதிமன்றத்தில் வழக்கு

திருவனந்தபுரம்: வயநாடு வனப்பகுதியில் தமிழக மாவோயிஸ்ட் வேல்முருகன் கேரள போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி விசாரணை கோரி அவரது உறவினர்கள் கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் கடந்த வாரம் கேரள அதிரடிப்படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இன்னொருவர் காயத்துடன் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டது தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த வேல்முருகன் (32) என தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் வேல்முருகனின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதிரடிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மாவோயிஸ்டுகள் தான் முதலில் சுட்டதாகவும் அதன் பின்னர் தான் தற்காப்புக்காக போலீசார் திருப்பி சுட்டதாகவும் கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது போலி என்கவுண்டர் என்று வேல்முருகனின் உறவினர்கள் கூறினர். கேரள காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் இது போலி என்கவுண்டர் என கூறியது. இந்நிலையில் வேல்முருகனின் மரணத்திற்கு நீதி விசாரணை கோரி அவரது உறவினர்கள் நேற்று வயநாடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வேல்முருகனின் சகோதரரான முருகன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். வேல்முருகன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பதவியில் உள்ள ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: