சூனியம் அகற்றவேண்டும் எனக்கூறி லட்சக்கணக்கில் ஏமாற்றிய 2 போலி மந்திரவாதிகள் கைது: தமிழகத்தை சேர்ந்தவர்கள்

சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த குப்பம் மண்டலம் மாடல் காலனி பகுதியில் மந்திரவாதிகள் சிலர் பொதுமக்களை ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பதாக குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் உடனடியாக அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர். அப்போது, அதேபகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது வீட்டில் 2 போலி சாமியார்கள் பூஜை நடத்தியது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்ததில், அவர்கள் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வீடுகளை நோட்டமிட்டு சென்று அந்த வீடுகளில் சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக கூறி வீட்டின் உரிமையாளர்களை மிரட்டி, ஆயிரக்கணக்கில் பணம் பெற்று வந்தது தெரியவந்தது.

இதுதவிர கோழி, ஆடுகள் பலியிடவும் பூஜை பொருட்கள் வாங்கவும் ஆயிரக்கணக்கில் தனியாக பணம் பெற்றுள்ளனர். சிலரிடம் மயக்க மருந்தை தீர்த்தம் எனக்கூறி கொடுத்து பின்னர் அவர்கள் அணிந்திருந்த  நகைகள் மற்றும் வீடுகளில் இருக்கும் பணத்தை கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது. இதுவரை இவர்கள் லட்சக்கணக்கில் பணம், நகைகளை ஏமாற்றியதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் எந்தெந்த பகுதியில் மக்களை ஏமாற்றினார்கள்? பின்னணியில் வேறு யாராவது ஈடுபட்டிருப்பார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: