தமிழகத்துக்கு துரோகமிழைக்கும் மத்திய அரசின் செயலை வேடிக்கை பார்க்கும் அதிமுக ஆட்சி ஒரு நிமிடம் கூட கோட்டையில் இருக்கக்கூடாது: வெற்றியை கலைஞர் நினைவிடத்தில் காணிக்கையாக்குவோம் என மு.க.ஸ்டாலின் சபதம்

சென்னை: திமுக திட்டங்களை நாசம் செய்த அதிமுக ஆட்சி இனி ஒரு நிமிடம் கூட கோட்டையில் இருக்கக்கூடாது என்றும், தேர்தல் வெற்றியை கலைஞர் நினைவிடத்தில் காணிக்கையாக்குவோம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.  வேலூர் மாவட்ட திமுக சார்பில் தமிழகம் மீட்போம்-2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்  ஆர்.காந்தி, மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.தேவராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு தலைமையேற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசியதாவது:  எடப்பாடி பழனிசாமி தமிழகத்துக்கு எந்த புதிய திட்டமாவது கொண்டு வந்தாரா? கிடையாது. தமிழக ஆட்சி அதிகாரத்தை வைத்து தானும் செய்யவில்லை. மத்தியில் உள்ள ஆட்சியின் துணையை வைத்து அவர்களையும் செய்ய  வைக்கவில்லை. ஆனால் மத்திய அரசாங்கம் தமிழகத்துக்குச் செய்த துரோகத்தை கை கட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்கும் ஆட்சி தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. அதனால் தான் இந்த ஆட்சி ஒரு நிமிடம் கூட கோட்டையில்  இருக்கக் கூடாத ஆட்சி என்று சொன்னேன்.  திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நாசம் செய்துவிட்டார்கள். புதிய திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. எந்த வழியில் பணம் வருமோ அந்த விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி கொள்ளைகளை அடிக்கிறார்கள்.  இந்தக் கொள்ளைக் கூட்டத்தை கோட்டையை விட்டு விரட்ட வேண்டாமா? இந்தப் பத்தாண்டு காலத்தில் தமிழகம் எல்லா வழியிலும் பின் தங்கிவிட்டது. இதனை மீட்டு மீண்டும் நம் பழம்பெருமையை புதுப்பித்தாக வேண்டும்.

 மீண்டும் கல்வி இல்லாத, வேலை இல்லாத சமூகமாக தமிழினத்தை மாற்றும் சதியை ஒரு கூட்டம் தொடங்கி இருக்கிறது. அந்தச் சதிக்கு தமிழக அரசு, இந்த அதிமுக ஆட்சி தலையாட்டிக் கொண்டு இருக்கிறது. இது தேர்தல் என்ற  ஜனநாயகப் போரால் தடுக்கப்பட வேண்டும். அதற்காகவே சட்டமன்றத் தேர்தல் வருகிறது. இங்கே பேசிய திமுக மாவட்டச் செயலாளர்கள், 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்த மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று,  ‘வெற்றியை எனது காலடியில் சமர்ப்பிக்கப் போவதாகச்’ சொன்னார்கள். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தொடர்ந்து இப்படி உறுதி எடுத்துச் சொல்லி வருகிறார்கள் உங்கள் அனைவருக்கும் நான் என்னுடைய அன்பான வேண்டுகோளாக ஒன்றைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 உங்கள் மாவட்டத்தின் தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற்றுக் கொண்டுவந்து, உங்கள் திருக்கரங்களினாலே எனது  கைகளிலே வழங்குங்கள். நாம் அனைவரும் இணைந்து, வாழ்நாள் முழுதும் ஓய்வே இல்லாமல் உழைத்த நமது தலைவர் கலைஞர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நினைவிடத்திற்குச் சென்று, அந்த வெற்றியைக் காணிக்கையாகச் செலுத்திக்  களிப்புறுவோம். தமிழகத்தில் ஜனநாயக நெறிமுறைகளில் நம்பிக்கையுள்ள ஆட்சியை அமைப்போம். மாநில சுயாட்சிக் கொள்கையில் நம்பிக்கையுள்ள கம்பீர ஆட்சியை திமுக சார்பில் வழங்குவோம்.நமது வருங்காலத் தலைமுறைக்கு சிறந்த வாழ்வு அமைய இந்தச் சட்டமன்றத் தேர்தல் போரை பயன்படுத்திக் கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

‘காவல்துறையில்  எஞ்சியிருக்கும் பெருமையையும் சீர்குலைத்துவிட வேண்டாம்’

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் நெய்வேலி நகர காவல் நிலையப் போலீசாரின் சித்ரவதைக்குப் பலியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம் காவல் நிலைய  இரட்டைக் கொலைக்குப் பிறகு-உயர் நீதிமன்றமே எச்சரித்தும் இதுபோன்ற போலீஸ் ‘டார்ச்சரும்’, ‘கஸ்டடி’ மரணங்களும் தொடருவது கடும் கண்டனத்திற்குரியது. அதிமுக ஆட்சியில் தமிழக காவல்துறை சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தடுமாறுகிறது என்பதற்கு ஆதாரங்களாக ஒரு சில காவல் நிலையங்களில் இதுபோன்று நடக்கும் சம்பவங்கள் வேதனையளிக்கிறது. போலீஸ் கஸ்டடியில் மரணம்  என்பதை மறைக்க - காயங்களுடன் சிறைச்சாலையில் செல்வமுருகன் அடைக்கப்பட்டது எப்படி? -அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கஸ்டடி மரணங்களை வழக்கம்  போல் மறைத்து தமிழகக் காவல்துறையின் எஞ்சியிருக்கின்ற பெருமையையும் சீர்குலைத்து விட வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: