நீதிமன்றங்களை அரசியல் ஆதாய களமாக்காதீர்கள் பாஜ வேல் யாத்திரை தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு: மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: பாஜ சார்பில் நடத்த இருந்த வேல் யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து தற்போது, இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும் எனவும் முகக்கவசம் அணிய  வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த இருப்பதாக பாஜ மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.  

 இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த செந்தில்குமார், பாலமுருகன் ஆகியோர் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், கொரோனா தொற்று பரவலை தடுக்க  அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, விநாயகர் சதுர்த்தி, முகரம் உள்ளிட்ட மத நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், வேல் யாத்திரை நடத்தப்பட்டால் கொரோனா தொற்று மட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.   யாத்திரை முடியும் நாளான டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் என்பதால்  சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

  இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பாஜ நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி தரப்படவில்லை என்று அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். இந்நிலையில், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டிஜிபியின் உத்தரவை எதிர்த்து பாஜ மாநில பொதுச்ெசயலாளர் கரு.நாகராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, பருவநிலை மாற்றம், தீபாவளி பண்டிகை போன்றவை  இருப்பதால் கொரோனா பரவல் அச்சம் உள்ளது.

கொரோனா 2வது அலை பரவும் அச்சம் உள்ளது. நவம்பர் 15ம் ேததிவரை எந்த ஊர்வலத்திற்கும் அனுமதி இல்லை என்றார். அப்போது நீதிபதிகள், துரதிஷ்டவசமாக நம் நாட்டில் நீதிமன்றங்களை தங்கள் அரசியல் லாபத்திற்காக களமாக பயன்படுத்துவது நடக்கிறது. ஆனால், அதற்கு நாங்கள் இடம் தரமாட்டோம். வேல் யாத்திரை எந்த வழியில் செல்ல வேண்டும்  என்று மனுதாரர் தரப்பு தீர்மானிக்க முடியாது. போலீசார்தான் முடிவு செய்ய முடியும். யாத்திரையில் நீங்கள் ஒழுங்கை கடைபிடித்தீர்களா என்று கேட்டனர்.

 அதற்கு பாஜ தரப்பில் ஆஜரான வக்கீல் ராகவாச்சாரி, இந்தியாவிலேயே கட்டுக்கோப்பான கட்சி பாஜகதான் என்றார்.

 அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், திருத்தணி கூட்டத்தில் கலந்துகொண்டபோது பலர் முகக் கவசம் அணியவில்லை, சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை. அவர்கள் மீது போலீசார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று அரசு தரப்பிடம்  கேள்வி எழுப்பினர்.

  மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது வழிகாட்டுதல்கள் மட்டுமே. கோயில்களே இல்லாத வழியில் யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளதே. யாத்திரை முடியும் நாள் என்ன நாள் என்று தெரியுமா, நீங்கள் 30 பேர்தான்  என்று கூறுகிறீர்கள். ஆனால் மனுவில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கேட்டனர். அதற்கு, 100 பேர் மட்டுமே யாத்திரைக்கு செல்வார்கள். யாத்திரையை ஓரிருநாள் முன்பே முடிக்கிறோம். கோயில்கள் தரிசனத்திற்கு திறக்கப்பட்ட பிறகு பக்தர்களுக்கு தடை விதிக்க முடியாது. முறைப்படுத்த மட்டுமே முடியும். இதுதொடர்பாக  புதிய மனுவை தாக்கல் செய்கிறோம் என்று பாஜ தரப்பு வக்கீல் தெரிவித்தார்.

 இதை ஏற்ற நீதிபதிகள், எத்தனை பேர் கலந்துகொள்கிறார்கள். அவர்களில் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் எத்தனை பேர் என்ற முழு விவரங்களுடன் புதிய மனுவை டிஜிபியிடம் கொடுக்க வேண்டும். அதன் மீது அவர் சட்டப்படி  முடிவெடுப்பார். விசாரணை வரும் செவ்வாய்க்கிழமைக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.இதன்பிறகு பேட்டியளித்த பாஜ வக்கீல்கள் பிரிவு தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் கூறும்போது, திட்டமிட்டபடி வேல் யாத்திரை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து தொடங்கும்.  சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்றார்.

Related Stories: